கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து - சென்னை வழித்தடம் மார்க்கமாக தர்ங்கா செல்லும் விரைவு தொடர்வண்டி 1,360 பயணிகளுடன் பெரம்பூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து இரவு 7.44 புறப்பட்டது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட கவரப்பேட்டை தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு தொடர் வண்டி மீது விரைவு தொடர் வண்டி பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானதில், விரைவு தொடர் வண்டியின் இஞ்சனுடன் மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பியிலிருந்து தொடர்வண்டி இயங்க கொக்கி மூலம் மின் இணைப்பு பெறும் பெட்டியானது பயங்கர சத்தத்துடன் தீ பற்றி எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி வாசிகள் மேலும் அங்கு கவிழ்ந்து கிடந்த விரைவு தொடர் வண்டியின் ஏழு குளிர்சாதன பெட்டியில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ரசாயனம் கலந்த தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அத்துடன் தொடர் வண்டியுடன் ஆன உயர் அழுத்த மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மேலும் மருத்துவ குழுவினர், காவல்துறையினர், மீட்பு குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டு விபத்துக்குள்ளான விரைவு தொடர்வண்டியின் குளிர்சாதன பெட்டியில் சிக்கிய மற்றவர்களை மீட்டனர். இதில் காயமடைந்த 19 பேர் அங்கிருந்து 108 அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் கவலைக்கிடமான நிலையில் நான்கு பேர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இதுவரை உயிர் இழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.
விபத்துக்குள்ளான ரயிலில் வந்த பயணிகள் அருகே உள்ள திருமண மண்டபங்களிலும் சமுதாய கூடங்களிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு, உள்ளூர் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு தண்ணீர், தேநீர், பிஸ்கட், மற்றும் உணவு ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்விடத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ஆறுதல் கூறியதோடு, மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இந்த விபத்து காரணமாக சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கும், அங்கிருந்து சென்னைக்கும் வந்து செல்லும் விரைவுத் தொடர்வண்டி மற்றும், கும்மிடிப்பூண்டியில் இருந்து-சென்னை மார்க்கமாகவும், சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாகவும் செல்லும் புறநகர் பயணிகள் தொடர்வண்டி சேவையும் பாதிக்கப்பட்டது.
இதனிடையே தென்னக தொடர்வண்டி துறை பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேரடியாக வந்து விபத்து குறித்து நேரடி விசாரணை மேற்கொண்டு விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.என்.சிங் விபத்துக்குள்ளான விரைவு தொடர்வண்டியின் பெட்டிகளை அகற்றும் நடைபெற்று வருவதாகவும், விபத்து குறித்து உயர் மட்டக் குழு விசாரணை நடத்தப்படும் என்றும் அதன் அறிக்கை வந்த பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் எனவும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு தொகை மருத்துவ அறிக்கையின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னையில் இருந்து பொன்னேரிக்கும், அங்கிருந்து சென்னைக்கும் புறநகர் பயணிகள் தொடர்வண்டி இயக்கப்படுவதால் விபத்தில் சிக்கிய விரைவு தொடர் வண்டியில் வந்த பயணிகள் பேருந்து மூலம் பொன்னேரி தொடர்வண்டி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில் சென்னையில் இருந்து ஐந்து தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் நோக்கி புறப்பட்ட சரக்கு தொடர்வண்டி ஆனது, தேவை இன்றி கவரப்பேட்டை தொடர்வண்டி நிலையத்தில் லூப் லைன் எனப்படும், கூடுதல் இருப்பு பாதை தொடர்வண்டி தடம் மாறி செல்லக்கூடிய பகுதிக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததும், விரைவுத் தொடர்வண்டி தொடர்ந்து பயணிப்பதற்கான பச்சை விளக்கு அனுமதி கிடைத்ததின் காரணமாகவே இந்தக் கோர விபத்து நேர்ந்ததாக தெரியவந்துள்ளது. லூப்லைன் உள்ள பகுதியில் அதுவும் சிக்னலுக்கு அருகே தொடர் வண்டியை நிறுத்தினால் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும், என்பதை கூட உணராமல் தொடர்வண்டித் துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேநேரம் விபத்து நடந்த பகுதியில் என்எ.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.