தமிழகம் முழுவதும் நீட் தேர்விற்கு எதிர்ப்பு நிலவிவரும் நேரத்தில் இதுவரை அனிதா மற்றும் பிரதீபா,சுபஸ்ரீ என தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அப்படி இருக்க சென்னை சேர்ந்த கோட்டீஸ்வரி என்ற மாணவி தான் எதிர்பார்த்த அளவுக்கு நீட் தேர்வில் மதிப்பெண் பெறாததால் மனம்முடைந்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் நீட் தேர்வின் இன்னொரு அவலத்தையும் எடுத்துரைக்கிறது.
சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ராமர் என்பவரின் மகள் கோட்டீஸ்வரி. இவர், இரண்டாவது முறையாக இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். இந்த ஆண்டும் குறைவான மதிப்பெண் எடுத்ததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறினார்.
இதுதொடர்பாக கோட்டீஸ்வரியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக மாணவியை மீட்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், மாணவி கோட்டீஸ்வரி பீகாரில் இருப்பதை கண்டுபிடித்த போலீசார், பாட்னா போலீசாரின் உதவியுடன் மாணவியை மீட்டுள்ளனர். மாணவி கோட்டீஸ்வரியை சென்னை அழைத்து வர தனிப்படை போலீசார் பீகார் விரைந்துள்ளனர்.