சென்னையில் மதுபோதையில் காரின் பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் பள்ளி மாணவிகள் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை மீனம்பாக்கம் பகுதியில் வந்த கார் ஒன்று சிக்னலை மீறி சாலையோரம் நின்ற நான்கு பள்ளி மாணவிகள் உட்பட ஆறு பேர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி மாணவிகள் இரண்டு பேர் காலிலும் கையிலும் காயம் ஏற்பட்டது. ஒரு தூய்மை பணியாளருக்கு கால் மற்றும் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து ஆறு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காரை ஓட்டிவந்த மாணவன் சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் எம்.சி.ஏ இரண்டாம் பயின்று ஆண்டு வரும் பாலமுருகன் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போது மது போதையில் இருந்த பாலமுருகன் சிக்னலில் காரை நிறுத்துவதற்கு பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவியின் சகோதரி ஒருவர் செய்தியாளரிடம் பேசுகையில், ''என்னுடைய தங்கச்சி தான் அவளுக்கு தொடையில் அடிபட்டிருக்கிறது. அவன் குடித்து விட்டு வந்திருக்கிறான். குடியால் தான் இப்படி நடக்கிறது. குடியை ஃபர்ஸ்ட் ஒழிக்க வேண்டும். காலையில் யாராவது இப்படி குடித்து விட்டு வருவார்களா. சின்னப்பிள்ளை தாங்குமா? இன்னைக்கு படுத்த படுக்கையா இருக்கா. அடுத்த வருஷம் அவளுக்கு பப்ளிக் எக்ஸாம். அவளுடைய எதிர்காலம் என்ன ஆவது. இதற்கு நீதி கிடைக்க வேண்டும்'' என கண்ணீர் விட்டு அழுதார்.