தமிழகம் முழுவதும் பலநூறு அரசுப் பள்ளி கட்டிடங்கள் பல வருடங்களாகப் பழுதடைந்த ஆபத்தான நிலையில் இருப்பதால் மாணவர்களை மரத்தடியிலும், சமுதாயக்கூடம், கிராம சேவை மையங்களிலும் வைத்து பாடம் நடத்தி வருகின்றனர். அதேபோல புதுக்கோட்டை மாவட்டத்திலும் நூறுக்கு மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் அரசுக்குக் கோரிக்கை வைத்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் திங்கள் கிழமை களபம் கிராமத்தில் அரசுப்பள்ளி வளாகத்தில் உள்ள பழுதான கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து கொட்டியதில் ஒரு மாணவன் காயமடைந்தான். தற்போது காயமடைந்த மாணவன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அமைச்சர் மெய்யநாதன் மாணவனை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். தலைமை ஆசிரியர் கவனக்குறைவால் விபத்து நடந்ததாகக் கூறி தலைமை ஆசிரியரைத் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.