
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகமணி. இவர் ஹயத்நகர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையில், இவர் வேறு சமூதாயத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு நாகமணியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவர் ஸ்ரீகாந்தை பதிவு திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாகமணி தனது ஸ்கூட்டரில் ராயபோல் பகுதியில் இருந்து மன்னேகுடா நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது சகோதரர் பரமேஷ், காரை வைத்து நாகமணியின் ஸ்கூட்டர் மீது மோதியுள்ளார். இதில் நிலை தடுமாறு நாகமணி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து, காரில் இருந்து இறங்கிய பரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து நாகமணியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த நாகமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெற்றோரை எதிர்த்து நாகமணி காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது சகோதரர், அவரை ஆணவக் கொலை செய்துள்ளதாக தெரியவந்தது. பெண் போலீஸை ஆணவக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளி பரமேஷை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மேலும், சொத்து தகராறு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.