Skip to main content

போராட்டங்கள் எடப்பாடி அரசுக்கு புதிதல்ல: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Published on 23/05/2018 | Edited on 23/05/2018
R. B. Udhaya Kumar


சென்னையில் அமைச்சர் ஆ.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுகிறதே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 

அதற்கு அவர், 
 

இந்த சம்பவம் தொடர்பாக முதல் அமைச்சர் தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். காவல்துறையும் ஒரு விளக்க அறிக்கையை கொடுத்திருக்கிறது. நிவாரணம் வழங்கியிருக்கிறார்கள். ஆங்கில ஏகாதி பத்தியத்தை எதிர்த்து நாம் சுதந்திர உரிமையை கேட்கிறபோது கூட நம் தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி அவர்கள்  அஹிம்சை வழியை உலகத்திற்கு கற்றுக்கொடுத்தார்கள். ஒரு உரிமைப் போராட்டதை இந்த உலகத்திற்கே அஹிம்சை வழியில் போராடி வெற்றிப் பெறலாம் என்று கற்றுத் தந்த நாடு நமது இந்திய தேசம். அந்நியர்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் அன்றைக்கு  அஹிம்சை வழியில் போராடி சுதந்திரத்தை பெற்றோம். 
 

இங்கே இன்றைக்கு கனிவான அரசு, மக்களுக்கான அரசு நடக்கிறது. அம்மாவினுடைய அரசு முழுக்க முழுக்க மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய அரசு. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக முதல் அமைச்சர் மக்களின் கோரிக்கைகளை திறம்பட எதிர்கொண்டு நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களை இந்த அரசு எதிர்கொண்டிருக்கிறது. ஆகவே இது முதல் போராட்டம் அல்ல. 
 

தூத்துக்குடியில் பேரணி நடக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பே போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் அந்த பேரணியை போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். சமாதானத்தை போராட்டக்காரர்கள் ஏற்காததே வன்முறைக்கு காரணம். தூத்துக்குடி தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. முதல் அமைச்சரின் நற்பெயரை கெடுக்கும் வகையில் மக்களின் அறியாமையை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துகின்றன. ஆகவே இது திட்டமிட்டு நடைப்பெற்றதா திட்டமிடாமல் நடைப்பெற்றதா என்பது அல்ல. இதுபோன்ற சூழ்நிலை நடந்திருக்கக்கூடாது என்பதுதான் எல்லோருடைய எண்ணம். இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்