நெல்லை மாவட்டத்தின் தொழில் நகரமான சங்கரன்கோவில் அதனுடன் இணைந்த பல கிராமங்களில் விசைத்தறிகளின் மூலம் ஜவுளி உற்பத்தி செய்யப்படுகிற தொழில் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. சுமார் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளைக் கொண்ட அந்தத் தொழிலில் நெசவு ப்ராச்சிங் சாயமிடுதல் வார்ப்பின் என்று நேரியடையாகவும் மறைமுகமாகவும் சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. அவர்களது வாழ்வாதாரமே விசைத்தறி நெசவுத் தொழில்தான்.
உயர்த்து வருகிற விலைவாசிக்கு ஏற்ப விசைத்தறி தொழிலாளர்கள் தங்களின் கூலி உயர்வுக்கான கோரிக்கை அளித்தும் கவனிக்கப்படாமல் போகவே கடந்த வாரம் முன்னோட்டமாக ஒரு நாள் அடையாளம் வேலை நிறுத்தம் மேற்கொண்டார்கள். அது தொடர்பாக, தொடர்புடைய அமைப்புகள். பேச்சு வார்த்தை நடத்தாத காரணத்தால் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சங்கரன்கோவில் தாலுகா அளவிலான ஒட்டு மொத்த விசைத்தறிக்கூடங்களும் அடைக்கப்பட்டுள்ளன.
கூலி ஒப்பந்த முறை முடிவடைந்தும் பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை. 60 சதவிகிதம் கூலி உயர்வு மற்றும் விடுப்பு சம்பளமாக தேசிய விடுமுறைக்கு ஒப்பான அளவு போன்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறோம் என்கிறார்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர்.
உள்நாட்டில் உற்பத்திப் பொருட்களுக்கான உரிய விலை கிடைக்கவில்லை ஜவுளித் தொழிலின் அத்தனை மூலப்பொருட்களின் விலைகள் உயர்ந்து விட்டன. போதாக்குறைக்கு ஜி.எஸ்.டி. அவஸ்தை வேறு உள்நாட்டின் நமக்கான ஜவுளிச் சந்தை சீனா, மற்றும் வங்கதேசம் வசம் போய்விட்டன. இதுபோன்ற நெருக்கடியான சூழலில் உள்ளது ஜவுளி உற்பத்திதொழில். இதன் காரணமாக அன்றாடம், 50-60 லட்சம் வரையிலான வியாபாரம் முடங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது என்கிறது ஜவுளி உற்பத்தியாளர்கள் அசோசியேஷன் வட்டாரத்தினர்.