திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக வேலுச்சாமி களமிறக்கப்பட்டு இருக்கிறார்.
வேலுச்சாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசி வாக்காள மக்களிடம் வேலுச்சாமிக்கு ஆதரவு திரட்டி விட்டு போயிருக்கிறார்.
அதை தொடர்ந்து தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காள மக்களை சந்தித்து வேலுச்சாமிக்கு ஆதரவு திரட்டுவதற்காக கழகத் துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, மேற்கு மாவட்ட செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்கரபாணி, கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் மற்றும் நத்தம் சட்டமன்ற உறுப்பினரான ஆண்டி அம்பலம் ஆகியோர் வாக்காள மக்களை சந்தித்து வேலுச்சாமிக்கு பட்டிதொட்டிகளில் எல்லாம் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் தொகுதிக்கு உட்பட்ட நத்தம் பகுதியில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய கழகத் துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமியோ...
நத்தம் பகுதியில் உள்ள வாக்காள மக்கள் பணத்திற்கு அடிமையாகாமல் அன்புக்கு அடிமையாகி கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆண்டி அம்பலத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து உதயசூரியனை உதிக்க வைத்து இருக்கிறீர்கள். அதுபோல் திமுக சார்பில் போட்டி போடும் வேலுச்சாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
மத்திய அரசும், மாநில அரசும் தொடர்ந்து தமிழக மக்களை புறக்கணித்து வருகிறது. அதற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றால் வரக்கூடிய தேர்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு மூலம் ராகுல்காந்தி பிரதமர் ஆவார் அதன்பின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வருவார். அப்படி தலைவர் முதலமைச்சராக வரும் பொழுது உங்களுடைய கோரிக்கைகளும் குறைகளும் நிரந்தரமாக தீர்க்கப்படும். அதோடு இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த முதியோர் உதவித் தொகையும் வீடு தேடி வந்து உங்களுக்கு வழங்க தயாராக இருக்கிறோம். அதனால் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் வேலுச்சாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிகம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று கூறினார்.
இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந்திரலாக கலந்து கொண்டனர்.