என்னை பற்றி மக்கள் பரபரப்பாக பேச வேண்டும் என்ற விளம்பரத்திற்காக தான் நான் துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்தேன் என கைது செய்யப்பட்ட சின்னத்திரை நடிகை நிலானி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து காவலர் சீருடையில் பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து, வடபழனி காவல் நிலையத்தில் ரிஷி என்பவர் அளித்த புகாரின்படி இன்ஸ்பெக்டர் சந்துரு விசாரணை நடத்தினர்.
அதில், வீடியோ பதிவு செய்தது சென்னை சாலிகிராமம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த சின்னத்திரை நடிகை நிலானி(33) என்பது தெரியவந்தது. 29 நாள் தீவிர தேடுதலுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் அதிகாலை நிலானியை நீலகிரி மாவட்டம் குன்னூரில் கைது செய்தனர்.
அப்போது கைது செய்த போலீசாரிடம் சின்னத்திரை நடிகை நிலானி அளித்த வாக்குமூலத்தில், சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமாவில் பெரிய நடிகையாக வலம் வர வேண்டும் என்று ஆசை இருந்தது. இதற்காகவே சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினேன். ஆனால் தொலைக்காட்சி தொடர்களில் தான் வாய்ப்பு கிடைத்தது.
அதை வைத்து ஜல்லிக்கட்டு போராட்டம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் என சமூக பிரச்னைக்கான போராட்டங்களில் தமிழ் இயக்கங்களுடன் சேர்ந்து போராடினேன். கடைசியாக ஈழத்தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆனாலும் என்னை பற்றி பெரிய அளவில் பொதுமக்கள் பேசவில்லை. இதனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்த நேரத்தில் சின்னத்திரை படப்பிடிப்பில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் போது அவர்கள் சீருடையிலேயே பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக பேசினேன்.
இதனால், உலகம் முழுவதும் ஒரே நாளில் பிரபலமானேன். அதற்காக தான் நான் அவ்வளவு நாள் காத்திருந்தேன். அதன்பின்னர், என்னுடைய பேஸ்புக் பக்கத்தை ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்தனர். என்னை பற்றி மக்கள் பரவலாக பேச வேண்டும் என்பதற்காகத்தான் வீடியோவை பதிவு செய்தேன். மேலும், பட வாய்ப்புக்கான விளம்பரமாக இது அமையும் என்று நினைத்தேன். அதன்படியே நடந்தது. மற்றப்படி காவல்துறை பற்றி தவறாக பேசும் எண்ணம் எனக்கு இல்லை என்று அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.