
திருச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மருமகளிடம் ஓடும் பஸ்ஸில் நகை பறித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி திருவானைக்காவல் மேலவிபூதி பிரகாரத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது தந்தை ராஜகோபால். இவர் கடந்த 1967இல் திருச்சி மாவட்டம் பழைய மன்னச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர்.
திருநாவுக்கரசுவின் மனைவி ஞானாம்பாள் (வயது 72 ). இவர் திருவானைக்காவலில் இருந்து டவுன் பஸ்ஸில் சத்திரம் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஜங்ஷன் செல்லும் பஸ்ஸில் ஏறி உறையூரில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க காரியத்திற்குச் செல்வதற்காக உறையூர் பஸ் ஸ்டாப்பில் இறங்கியுள்ளார்.
அப்போதுதான் கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலி காணமல் போனது அவருக்குத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து உறையூர் போலீசில் ஞானாம்பாள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஓடும் பஸ்ஸில் நகையைப் பறித்த மர்ம ஆசாமிகளைத் தேடிவருகின்றனர்.