Skip to main content

"அண்ணா.. அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்துப் பார்க்கிறேன்.." - ஸ்டாலின் நெகிழ்ச்சி

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

 

xcvh

 

திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஜனநாயகப் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15-ஆவது தேர்தல் பல்வேறு நிலைகளில் நிறைவுற்று, கழகத் தலைவர் - பொதுச்செயலாளர் - பொருளாளர் உள்ளிட்டோரைத் தேர்வு செய்யும் கழகத்தின் இதயமாம் பொதுக்குழு நேற்று (9-10-2022) மிகச் சிறப்பான முறையிலே கூடி, ஒரு மனதாகத் தேர்வு செய்து, ஜனநாயகக் கடமையைத் திட்பமாக நிறைவேற்றியுள்ளது. ஓர் இயக்கத்தின் அடி முதல் முடி வரையிலான கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும், அதன் பொதுக்குழு எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கான இலட்சிய இலக்கணத்தைப் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களும், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களும் வரையறுத்து நமக்கு வகுத்துத் தந்திருக்கிறார்கள். அந்த அரசியல் இலக்கணத்துக்கேற்ப நாம் இந்த இயக்கத்தைத் தொடர்ந்து கவனமாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.

 

பேரறிஞர் அண்ணா இப்போது இல்லை; முத்தமிழறிஞர் கலைஞர் இல்லை. அண்ணாவுக்கு அருமைத் தம்பியாக, தலைவர் கலைஞருக்கு உற்ற நண்பராக காலமெலாம் இருந்து, எனக்கு பெரியப்பாவாக, அரசியல் பயிற்றுவித்த இனமானப் பேராசிரியர் அவர்களும் இல்லை.  நம்மிடையே நடமாடிக் கொண்டிருந்த இவர்கள் மூவரும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடன் படங்களாக மேடையில் வீற்றிருந்தனர். அவர்களுக்கு மலர் தூவி என் நெஞ்சம் நிறைந்த வணக்கத்தைச் செலுத்தினேன்.

 

கழகத்தின் மூத்த முன்னோடி - தலைவர் கலைஞர் அவர்களின் நிழல் போல நீங்காதிருந்த அன்பிற்குரிய ஆர்க்காட்டார் அவர்கள் கழகத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு, பொதுக்குழு மேடையில் அவர் அமர்ந்து, கழகத் தலைவராக உங்களில் ஒருவனான நான் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுகிற அறிவிப்பை வெளியிட்டபோது, பொதுக்குழு நடைபெற்ற சென்னை அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் ஹாலில் எழுந்த கரவொலியும் ஆர்ப்பரிப்பும், அலைகளின் பேரோசையை விஞ்சி, எனக்குப் பெருமகிழ்ச்சியை மட்டுமல்ல, பெரும் பொறுப்பு என் தோளில் இரண்டாவது முறையாக ஏற்றப்பட்டிருக்கிறது என்கிற கவனத்துடன் கூடிய எச்சரிக்கை உணர்வையும் சேர்த்தே ஏற்படுத்தியது.  அந்த உணர்வுடன்தான் நான் மேடையில் ஏறி, பொதுக்குழு உறுப்பினர்களின் திருமுகங்களைக் கண்டு பரவசமடைந்தேன்.

 

பொதுக்குழுவுக்கு வரும் வழியெங்கும் கழகத்தின் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு நின்று வாழ்த்து முழக்கமிட்டு, வாஞ்சையுடன் தங்கள் அன்பினை வெளிப்படுத்தி, பரிசுகளை வழங்கி, உங்களில் ஒருவனான எனக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும், நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வழங்கினார்கள். இலட்சோப லட்சம் எளிய தொண்டர்களின் இணையற்ற இயக்கமல்லவா இது! வழிநெடுக இருந்த அந்தத் தொண்டர்களின் பிரதிநிதிகள்தான் நாம் என்பதை நினைவூட்டுவதாகவே பொதுக்குழு அரங்கம் அமைந்திருந்தது.

 

தொண்டர்களின் இரத்தத்திலும் வியர்வையிலும் திரட்டப்பட்ட நிதியினைக் கொண்டு உருவாகி எழுந்து நிற்கும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கம் போன்ற வடிவமைப்பில் பொதுக்குழு அரங்கம் வெகு சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.  பொதுக்குழு அரங்கப் பணிகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், எப்போதும் போலவே தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை, நாம் எண்ணி எதிர்பார்ப்பதற்கும் கூடுதலான சிறப்புடன் நிறைவேற்றிக் காட்டியிருந்தார். அவருக்கு உறுதுணையாக மாவட்டக் கழகச் செயலாளர்கள் அமைச்சர் சேகர்பாபு, திரு.சிற்றரசு ஆகியோர் இருந்து பொதுக்குழு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர்.

 

கூடிக் கலைவது அல்ல பொதுக்குழு. கழகத்தின் ஆணிவேராகத் திகழும் கிளைக் கழகங்கள் முதல் ஒன்றிய – நகர - பேரூர்க் கழகங்கள் வரை கட்சி அமைப்புக்கான தேர்தல் முறையின்படி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, அதன்பிறகு மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் கூடி, தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தி.மு.கழகத்தின் உச்சபட்ச அதிகார அமைப்புதான் பொதுக்குழு.

 

நேற்றைய பொதுக்குழுவில் நான் உரையாற்றியது போல, கிளைகள் முதல் மாவட்ட நிர்வாகம் வரையிலான தேர்தலில் வழக்கமான சில சலசலப்புகளைத் தவிர, கழகத்தின் உட்கட்சித் தேர்தல் பெரும்பாலும் அமைதியாகவே நடந்து முடிந்ததற்குக் காரணமானவர்கள் கழகத்தின் சார்பிலான தேர்தல் ஆணையாளர்கள். அந்த ஆணையாளர்களைக் கடந்து, ஒரு சில இடங்களில் உருவான வாக்குவாதங்களையும் மனக்கசப்புகளையும் சரிசெய்வதற்காக, அவர்களைத் தலைமைக் கழகத்திற்கு அழைத்து, ஆற அமர உட்கார வைத்து ஆக்கப்பூர்வமான முறையில் ஆலோசித்து, சுமுகமான முறையில் தீர்வு கண்டு, நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, அமைப்புத் துணைச் செயலாளர் அன்பகம் கலை ஆகியோர்.

 

கிளைகள் முதல் மாவட்ட நிர்வாகம் வரை உள்கட்சி ஜனநாயகம் உறுதி செய்யப்பட்ட பிறகே பொதுக்குழு கூடி, உங்களில் ஒருவனான என்னைத் தலைவராகவும், கழகப் பொதுச் செயலாளராக அண்ணன் துரைமுருகன் அவர்களையும், பொருளாளராக சகோதரர் டி.ஆர்.பாலு அவர்களையும் மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளது. நாங்கள் முறைப்படி தேர்வு பெற்றவுடன், முதன்மைச் செயலாளராக திரு.கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்களாக திரு.இ.பெரியசாமி, திரு.க.பொன்முடி, திரு.ஆ.ராசா, திரு.அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் கழக சட்டதிட்டங்களுக்குட்பட்டு  மீண்டும் நியமிக்கப்பட்டனர். மகளிருக்குரிய துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு அன்புத் தங்கை கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் நியமிக்கப்பட்டார்.

 

கழகத் தணிக்கைக் குழு உறுப்பினர்களாக திரு.முகமது சகி, திரு.கு.பிச்சாண்டி, திரு.வேலுச்சாமி, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கழகச் சுற்றுச்சூழல் அணி, அயலக அணி ஆகியவற்றை அங்கீகரிக்கும் சட்டப் பிரிவு, தொ.மு.ச தொடர்பான சட்டத்திருத்தம், சட்டமன்றத் தொகுதிகளுக்கான தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு தொடர்பான சட்டத் திருத்தம் ஆகியவற்றைக் கழகத் சட்டத் திருத்தக் குழுச் செயலாளர் பி.வில்சன் அவர்கள் பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு வைக்க, அவை ஏற்கப்பட்டன.

 

எதையும் கழக விதிகளுக்குட்பட்டு ஒருமனதாக நிறைவேற்றுவதுதான் கழகப் பொதுக்குழுவின் தனிச் சிறப்பு. அத்தகைய சிறப்புமிக்க பொதுக்குழுவில் தலைவர் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளையும் பங்கேற்ற கழகத்தினரையும் வாழ்த்தி முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர் திருச்சி சிவா ஆகியோர் உரையாற்றினார்கள். தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் ஏற்புரை வழங்கினர்.

 

தங்கை கனிமொழி தனது ஏற்புரையில், “அண்ணா.. அப்பா இல்லாத இடத்தில் உங்களை வைத்துப் பார்க்கிறேன். கலைஞரின் இடத்தில் உங்களை இந்த நாடு பார்க்கிறது. உங்கள் வழிகாட்டுதலை எதிர்நோக்குகிறது” என்று குரல் தழுதழுக்க, உணர்ச்சிப்பூர்வமாகச் சொன்னார். நான் உரையாற்றும்போது, அண்ணா இல்லை.. கலைஞர் இல்லை என்பதை எடுத்துக்காட்டி, அவர்கள் இல்லாத நிலையில், இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை சுமப்பது எத்தகைய கடினமான பெரும்பணி என்பதையும் என்னென்ன சவால்கள் நமக்கு எதிரே ஏராளமாக இருக்கின்றன என்பதையும் அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உங்களில் ஒருவனான என்னுடன், உயிர்நிகர் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் அனைவரும் ஒருமித்த உணர்வுடன் துணைநிற்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தேன்.

 

தலைவர் என்கிற பொறுப்பில் உள்ள தலைமைத் தொண்டனான எனக்கு அந்த வலிமை வேண்டும் என்பதற்காகப் பொதுக்குழு நிறைவடைந்தவுடன் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தி, உளப்பூர்வமாக அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டு, கோபாலபுரம் இல்லத்திலும் சி.ஐ.டி காலனி இல்லத்திலும் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினேன். முன்னதாக, பேராசிரியர் இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.

 

தோழமைக் கட்சித் தலைவர்களும் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களும் என் மீது அன்பு கொண்ட சான்றோர்கள் பலரும் அலைபேசியிலும், சமூக வலைத்தளங்களிலும், கடிதம் வாயிலாகவும் தொடர்ந்து வாழ்த்துகளை வழங்கியபடி இருந்தனர். தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ். அழகிரி அவர்கள், எந்நாளும் திராவிட முழக்கமிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் வைகோ அவர்கள், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரான மருத்துவர் இராமதாசு அவர்கள், புதுவை மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. நாராயணசாமி அவர்கள், பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் கொள்கைத் தோழமைமிக்க சகோதரர் தொல்.திருமாவளவன் எம்.பி. அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் சகோதரர் வேல்முருகன் எம்.எல்.ஏ. அவர்கள், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கலைஞானி கமல்ஹாசன் அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை வழங்கியுள்ளனர்.  ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். தவத்திரு குன்றக்குடி அடிகளார், கவிப்பேரரசு வைரமுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, செல்வப்பெருந்தகை ஆகியோர் தங்கள் அன்பான வாழ்த்துகளை அலைபேசி வாயிலாகத் தெரிவித்தனர்.

 

இந்த வாழ்த்துகள் எனக்கு மட்டுமானதல்ல. கழகத் தலைவர் என்ற பொறுப்பை சுமக்கின்ற என்னைத் தாங்கி நிற்கும் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்குமான வாழ்த்துகள். அந்த வாழ்த்துச் செய்திகளின் அடிநாதமாக இருப்பது, கழகத்தின்மீது தமிழ்நாடு வைத்துள்ள நம்பிக்கையும் இந்திய அளவிலான எதிர்பார்ப்பும்தான்.

 

பொதுக்குழுவில் என் பேச்சில் குறிப்பிட்டதுபோல, “நம்மைப் போல இலட்சக்கணக்கான தோழர்கள் - தொண்டர்கள் இந்தத் தமிழினத்துக்கு உழைக்க சுயமரியாதை காக்கக் காத்திருக்கிறார்கள். நமது பொறுப்பும் கடமையும் மிக மிகப் பெரியது. எந்தப் பொறுப்பாக இருந்தாலும், அதனை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் பொறுப்புகள் தொடரும். மறந்துவிடாதீர்கள்! நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்சினையையும் உருவாக்கி இருக்கக்கூடாதே என்ற கவலையான நினைப்போடுதான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னைத் தூங்விடாமல் கூட ஆக்கிவிடுகிறது. உங்களது செயல்பாடுகள் கழகத்துக்கும் உங்களுக்கும் பெருமை தேடித் தருவது போல அமைய வேண்டுமே தவிர, சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது” என்பதை மனதில் கொள்ளுங்கள்.

 

பதவிப் பொறுப்புக்கு வர இயலாமல் போன இயக்கத் தோழர்களை அரவணைத்துச் செயல்படுங்கள். வெறும் வாயை மெல்லும் அரசியல் எதிரிகளின் வாயில் அவல் அள்ளிப் போடுவது போன்ற சொல்லையும் செயலையும் தவிர்த்திடுங்கள். நம்முடைய இலட்சியம் உயர்வானது. நமக்கான பாதை தெளிவானது. ஆனால், பயணம் எளிதானதல்ல. மதவெறிச் சக்திகளும், வெறுப்பரசியல் கூட்டமும், இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கின்ற சதிகளும் அடிக்கு அடி குறுக்கிடுகின்ற காலம் இது. அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டு பயணிக்கின்ற வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. மக்களின் பேராதரவும் நமக்கு இருக்கிறது.

 

கழக அமைப்பு மேலும் வலிவு பெறும் வகையில் பொது உறுப்பினர்கள் கூட்டத்தை அதிகளவில் நடத்துங்கள். கழகத்தின் கொள்கைகளையும் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தெருமுனைப் பிரச்சாரங்களை, திண்ணைப் பிரச்சாரங்களை நடத்துங்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் திட்டங்கள் சரியான முறையில் போய்ச் சேர்ந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்தி, பொதுமக்களின் நன்மதிப்பைப் பெறுங்கள். அரசியல் எதிரிகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ளும் வகையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை உருவாக்கும் பணியை இப்போதே தொடங்குங்கள். முப்பெரும் விழாவில் நான் சொன்னது போல, நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற வெற்றியினை அடைய, களப் பணியாற்றுங்கள்.

 

தலைவனாக அல்ல, உயிர்நிகர் தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்ட தலைமைத் தொண்டனாக உங்களில் ஒருவனான நானும் களத்தில் முதன்மையாக நிற்பேன். பொதுக்குழுவில் சொன்னதை பொதுமக்களிடம் கொண்டு சென்று செயல்படுத்துவோம். கடைக்கோடித் தொண்டர் முதல் கட்சித் தலைவர்கள் வரை நெஞ்சார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி மலர் தூவி, நாட்டு நலப் பணியினை நாள்தோறும் தொடர்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்