Skip to main content

சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்த விவகாரம்; வெளியான பகீர் தகவல்!

Published on 03/05/2024 | Edited on 03/05/2024
information Released for namakkal Chicken Rice Affair  
பகவதி

நாமக்கல்லைச் சேர்ந்த பகவதி என்பவர் கடந்த 30 ஆம் தேதி (30.04.2024) இரவு 7 சிக்கன் ரைஸ்களை உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்து பார்சல் வாங்கிக் கொண்டு சென்று வீட்டில் உள்ளவர்களுடன் சாப்பிட்டுள்ளார். அப்போது இந்த உணவை சாப்பிட்ட பகவதியின் 72 வயது தாத்தா மற்றும் தாய் ஆகிய இருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருவர் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். குறிப்பிட்ட அந்த உணவகத்தில் 80க்கும் மேற்பட்டோர் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட யாருக்கும் உடல் நலம் பாதிக்கப்படாத நிலையில் இவர்கள் இரண்டு பேருக்கு மட்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

அதே சமயம் உணவின் மூலம் உபாதைகள் (புட் பாய்சன்) ஏற்பட்டால் வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று வலி தான் ஏற்படும் ஆனால் இவர்கள் மருத்துவமனைக்கு வரும் பொழுது கடுமையான சோர்வுடன் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர் என மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. தொடர்ந்து. மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் இவர்கள் சாப்பிட்ட சிக்கன் ரைஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் பூச்சி மருந்து எங்கு யாரால் கலக்கப்பட்டது என்பது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இத்தகைய சூழலில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்ட சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி நேற்று (02.05.2024) உயிரிழந்தார். இந்நிலையில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு தாத்தா உயிரிழந்த வழக்கில் அவரது பேரன் பகவதி கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவரான பகவதியின் தவறான பழக்க வழக்கங்களைத் தட்டிக்கேட்டதால் சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்ததாக போலீசில் திடுக்கிடும் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். இதனையடுத்து பகவதி மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிக்கன் ரைஸை சாப்பிட்ட பகவதியின் தாய் நதியா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்