![Stabilo Caucasus in Biryani ... Shock in Aranthangi!](http://image.nakkheeran.in/cdn/farfuture/d4dAJkWr7fHVIjAMAunWCP12RpNnJxlws98xwF_0IL8/1652096302/sites/default/files/inline-images/w3_4.jpg)
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்டவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அந்த பிரியாணியில் பாக்டீரியா தொற்று உள்ளது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் செந்தமிழ் நகரில் உள்ள சித்திரவேல் என்பவரின் வீடு கட்டுமானப் பணியில் கான்கிரீட் போடப்பட்டது. கட்டிடக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் உறவினர்களுக்காக அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையில் சிக்கன் பிரியாணி வாங்கி கொடுத்துள்ளார். கான்கிரீட் பணியை பாதியில் நிறுத்திவிட்டு சாப்பிட முடியாது என்பதால் மாலை 5 மணி வரை வேலை முடிந்த பிறகு பிரியாணி பொட்டலங்களை தொழிலாளர்கள் வாங்கியுள்ளனர்.
பிரியாணி என்றால் வீட்டில் இருக்கும் தங்கள் குழந்தைகளுக்கு பிடிக்குமே என்று பல பெண்கள் பிரியாணியை சாப்பிடாமல் தங்கள் குழந்தைகளுக்காக வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். இரவில் பிரியாணியை குழந்தைகளோடு சாப்பிட்டுப் படுத்த சில மணி நேரத்தில் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதி மக்கள் ஒவ்வொருவராக மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதியாகினர். 4 வயது குழந்தை உட்பட 27 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில், அந்த பிரியாணியில் 'ஸ்டபைலோ காக்கஸ் ஆரவ்ஸ்' என்ற பாக்டீரியா தொற்று உள்ளது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த பிரியாணியை சாப்பிட்டவர்களின் மாதிரியை ஆய்வு செய்ததில் பாக்டீரியா தொற்று கண்டறியப்படவில்லை. பிரியாணி மாதிரியின் ஆய்வு முடிவை வைத்து உணவு பாதுகாப்புத்துறை தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் என மாவட்ட அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். அண்மையில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், அந்த ஷவர்மாவில் ஷிகெல்லா எனும் வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.