சென்னை உயர்நீதிமன்றம் அருகில் என்.எஸ்.சி போஸ் சாலையில் சிறுகடை வியாபாரிகளை அப்புறப்படுத்திய மாநகராட்சி நிர்வாகம் உயர்நீதிமன்றம் அறிவித்தது போல் மாற்று இடம் இன்னும் வழங்கப்படாததை கண்டித்து சிங்காரவேலர் சாலையோர சிறுகடை வியாபாரிகள் நலசங்கம் சார்பில் இன்று சென்னை சென்ட்ரல் அருகில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சென்னையில் மக்கள் புழக்கம் அதிகம் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையில் கடந்த பல ஆண்டுகளாக ஏழை, எளியோர் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் சுமார் 300 பேர் சிறுகடை அமைத்து பூ, பழம், வீட்டு உபயோகப்பொருட்கள், துணிவகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மலிவான விலையில் விற்று வியாபாரம் செய்து வந்தனர். இந்த வியாபாரிகளை ஆக்கிரமிப்பாளர்கள் என்ற முத்திரை குத்தி அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சிங்காரவேலர் சாலையோர சிறுகடை வியாபாரிகள் நலச்சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடைகளை அகற்றக்கூடாது என தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. மறுசீராய்வு வழக்கு தொடரப்பட்டு இதன் மீது உயர்நீதிமன்றம் கடந்த 6.4.2016ல் வழங்கிய தீர்ப்பில் மேற்படி வியாபாரிகளுக்கு மறுவாழ்விற்காக உடனடியாக மாற்று இடமளிக்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. நீதிமன்ற பரிந்துரையை மாநகராட்சி கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நீதிபதி ஏ.ராமமூர்த்தி தலைமையில் ஹாக்கிங் ஜோன் இம்பிளி மெண்டேசன் கமிட்டி அமைக்கப்பட்டது. மாற்று இடம் வழங்கவேண்டும் என கடந்த 6.4.2016ல் கடிதம் கொடுத்தும் மாநகராட்சி நிர்வாகம் இதுநாள் வரை செயல்படுத்தவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் 6 முறைக்கு மேல் நீதிபதி மற்றும் மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமான கடிதம் கொடுத்தும், பிரச்சனை தீர்க்கப்படவில்லை.
சைனா பஜார் வியாபாரிகள் சங்கம் மாநகராட்சியிடம் குறிப்பிட்டு கொடுத்த மாற்று இடத்தை ஒதுக்கீடு செய்து முத்துசாமி சாலையில் (பல்லவன்சாலை) உடனே வழங்கிட வேண்டும் எனவும் டவுன் வெண்டிங் கமிட்டியை தாமதமின்றி அமைக்கவேண்டும் எனவும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாநகராட்சி 59வது வட்ட அலுவலகத்தை நலசங்கத்தின் தலைவர் எம்.வி.கிருஷ்ணன் தலைமையில் முற்றுகையிட்டனர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரிடம் செயற்பொறியாளர், மண்டல அலுவலர், உதவிப்பொறியாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு வாரத்தில் சிறுகடைவியாபாரிகள் கோரிய இடத்தில் கடைகள் வழங்க ஆவண செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி நிர்வாகம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற தவறும் பட்சத்தில் சிங்காரவேலர் சாலையோர சிறுகடை வியாபாரிகள் நலச்சங்கம் சென்னை முழுவதும் உள்ள வியாபாரிகள் சங்கங்களின் துணையோடு வலுவான போராட்டம் நடத்தும் என தலைவர் எம்.வி.கிருஷ்ணன் கூறினார்.
Published on 28/03/2018 | Edited on 28/03/2018