கட்சி வேலை எதுவும் பார்க்காமல், தேர்தல் நேரத்தில் மட்டும் குழப்பம் ஏற்படுத்தும் ஒரு சிலரால், தப்பான செய்தி கொடுக்கப்படுகிறது. அதை பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியிட வேண்டாம். நிர்வாகிகள் நாங்கள் இருக்கிறோம். எங்களிடம் கேட்டு சரியான செய்தியை வெளியிட வேண்டும். கட்சிக் கட்டுப்பாட்டை மீறுபவர்களை கட்சியை விட்டே நீக்க வேண்டும்.
குறிப்பாக, சிவகாசி முன்னாள் நகர்மன்ற தலைவர் ஞானசேகரன் மற்றும் முன்னாள் விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கணேசன் ஆகிய இருவரையும் அடிப்படை உறுப்பினர் என்பதிலிருந்தே நீக்க வேண்டும் என்று கட்சி மட்டத்தில் ஒப்புதல் பெற்று மாநிலத் தலைமைக்கு எழுத்துமூலமாக தெரிவித்திருக்கிறோம். கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவர்களின் வாகனங்கள் நேற்றிரவே அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் வீட்டுக்கு வெளியில் நின்றதாக எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. அதனால், இரவோடு இரவாகப் பேரம் பேசியிருப்பார்களா என்பது தெரியவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிற நல்ல பெயரைக் கெடுப்பதற்கு அதிமுககாரங்களும் பி.ஜே.பி.காரங்களும் செய்யும் சதி. நாலைந்து பேரைத் தூண்டிவிட்டு, அதில் குளிர்காய முடியுமா என்று பார்க்கிறார்கள். எந்தவிதத்தில் இத்தொகுதியில் அதிமுகவோ, பி.ஜே.பியோ வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. 2ஜி-ங்கிற பொய் வழக்கால், கடந்த தேர்தலில் திமுகவும் தோற்றது. காங்கிரஸும் தோற்றது. அது பொய் வழக்கு, தப்பான வழக்கு என்பது நிரூபணமாகிவிட்டது.
எங்கள் தலைவர் ராகுல் காந்தி யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ, அவருக்கு எல்லா கட்சி நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் வேலை பார்த்து அவரை வெற்றிபெறச் செய்வோம். அறிவிப்பதற்கு முன்னாலேயே, சொந்த விருப்பு வெறுப்பு பார்த்து, பொய்ப் பிரச்சாரம் செய்து, ஒருவரை டேமேஜ் பண்ணுவதற்கு கட்சி பெயரைப் பயன்படுத்துவது தவறானது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் கலந்துபேசியபோது, எல்லோரும் மாணிக்கம் தாகூர் என்ற ஒரு பெயரை மட்டுமே சொன்னார்கள்.
ஒருமனதாக அந்த ஒரு பெயரைத்தான் சொன்னார்கள். யாரும் அவர்கள் இஷ்டத்துக்கு ஒரு பெயரைச் சொல்ல முடியாது. ஏனென்றால், இதுவந்து ஜெயலலிதா நடத்திய அதிமுக கிடையாது. இது சுதந்திரமும் உரிமையும் எல்லாருக்கும் இருக்கிற காங்கிரஸ் கட்சி. விருதுநகர் தொகுதிக்கு மொத்தம் 9 பேர் விருப்பமனு அளித்திருந்தார்கள். ஆனால்,
எல்லாரும் ஒரே மனதாகச் சொன்ன பெயர் மாணிக்கம் தாகூர் மட்டும்தான்.