"நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான மனிதர்களையும் கண்டு இருக்கிறது. ஆனால் இந்த வழக்கும் விசித்திரமானது அல்ல வழக்காடும் நானும் புதுமையானவன் அல்ல" என பராசக்தி படத்தில் கோர்ட் சீன் ஒன்றில் சிவாஜி கணேசன் இப்படிச் சொல்லுவார். அதேபோல்தான், நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்த இளைஞர் ஒருவர், கல்குளம் தாலுக்கா மருந்துக்கோட்டையைச் சோ்ந்த சந்தோஷம் மகன் ஸ்டாலின் சிங் (28) எம்.சி.ஏ பட்டதாரியான நான், ஆண்மையுள்ள ஆண் மகன்தான் என அரசு அறிவிக்க வேண்டும். மேலும், என்னைக் கேலி செய்தவா்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தார்.
ஸ்டாலின் சிங் ஏன்? எதற்காக இப்படி ஒரு மனு கொடுத்தார் என்று அவரிடம் பேசினோம். அவர், "நான் பள்ளி கல்லூரி படிக்கும் போதே, நன்றாகப் படிக்கும் மாணவன். மேலும், எல்லோரிடமும் நன்றாகப் பேசும் குணமுடையவன். என்னுடைய பேச்சின் நலினத்தையும் நடவடிக்கைகளையும் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்கள், என்னை கேலியும் கிண்டலும் செய்து வந்தனர். இவர்களால் நான் செல்கிற இடமெல்லாம் என் மனம் பாதிக்கும் அளவுக்கு நடந்துவந்தது.
இந்த நிலையில், நான் எம்.சி.ஏ படிப்பு முடித்ததும், பல தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்தது. அங்கு வேலைக்குச் சென்றால் சக ஊழியா்களும் நண்பா்களும் திருநங்கை என்றே என்னை அடையாளப்படுத்தி அழைத்துவந்தனர். இதனால், நான் அந்த நிறுவனங்களில் வேலை செய்வதை தவிர்த்தேன். 2013-ல் இருந்து திருவனந்தபுரத்தில் ஒரு பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கைநிறையச் சம்பளத்துடன் வேலை செய்து வருகிறேன். அங்கு ஒரு நாள்கூட நான் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகமால் வேலை செய்தது கிடையாது. இதே நிலைமைத்தான் ஊரிலும் உள்ளது.
இந்த நிலையில், எனக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. அப்படியிருந்தும் என்னைத் தொடர்ந்து பலர் கேலி செய்வதால் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இது என்னை மட்டுமல்ல என் குடும்பத்தையும் மனதளவில் பாதிப்படையச் செய்துள்ளது. இதனால்தான் என்னால் நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான், நான் ஆண் மகன்தான் என அரசு அறிவிக்க வேண்டுமென்று கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் கோர்ட்டுக்கும் செல்வேன். என்னைப் பொறுத்தவரை இதுவொன்றும் விசித்திரமாகத் தெரியவில்லை. நானும் புதுமையானவன் என்றும் கூறவில்லை. இந்த மாதிரி கேலி என்னை மனதளவில் பாதிப்படையச் செய்து விட்டது” என்று கூறினார்.