சிவகங்கை மாவட்டம், காளையர் கோவில் அடுத்த சருகனி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. 48 வயதாகும் இவர், டைல்ஸ் ஒட்டும் பணியைச் செய்து வருகிறார். மனைவி மற்றும் இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். முதலில் சிவகங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள ஊர்களில் வேலை செய்து வந்த சுப்பையா பின்னர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் சென்று அங்கேயே தங்கியிருந்து டைல்ஸ் ஒட்டும் பணிகளை மேற்கொண்டார். தற்போது அவர் ஹைதராபாத்தில் டைல்ஸ் ஒட்டும் பணியைச் செய்து வந்தார்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை முதலில் சாதாரணமாக எடுத்துகொண்டார் சுப்பையா. விரைவில் ஊரடங்கு முடிந்துவிடும் என நினைத்தார். ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதும் அது குறித்து கவலை அடைந்தார். மனைவி, மகன்கள், மகளைப் பார்க்க வேண்டும் என்று நினைத்த சுப்பையா, ஹைதராபாத்தில் இருந்து சிவகங்கை வரை ஆயிரம் கிலோ மீட்டர் நடக்க முடியுமா? வழியில் உணவு கிடைக்குமா? தண்ணீர் கிடைக்குமா? எங்கு உறங்குவது? எங்கு ஓய்வு எடுப்பது? என பலவிதமாக யோசித்தார்.
மனைவி, மகன்கள், மகள் மீதான பாசத்தில் தூரம், உணவு என எதைப்பற்றியும் கவலைப்படாமல் கடந்த 19- ஆம் தேதி நடக்க ஆரம்பித்தார். கர்னூர், குப்பம், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை வழியாக இரவு பகல் பாராமல் நடந்து வந்திருக்கிறார். வழியில் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. வழியில் கொடுக்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் நடந்துள்ளார். சிவகங்கை எல்லையில் உள்ள சோதனைச் சாவடியை 6- ஆவது நாளில் அடைந்துள்ளார்.
அந்தச் சோதனைச் சாவடியில் சுப்பையாவை காவல்துறை அதிகாரிகள் விசாரித்துள்ளனர். ஹைதராபாத்தில் இருந்து நடந்து வந்ததாக சுப்பையா சொன்னவுடன், காவல்துறை ஆய்வாளர் மோகன் அவரை, 'முதலில் உட்காருங்க' எனச் சொல்லி அவருக்கு உணவு ஏற்பாடு செய்திருக்கிறார். மேலும் முகக் கவசம், ஆயிரம் ரூபாய் பணம், அரிசியைக் கொடுத்ததுடன், சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ள செய்தார். பின்னர் சுப்பையாவை அவரது கிராமத்திற்கு அனுப்பி வைத்தார் காவல் ஆய்வாளர்.
மனைவி, பிள்ளைகள் மீதான பாசம் சுப்பையாவை ஆறு நாளில் ஆயிரம் கிலோ மீட்டர் நடக்க வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.