திங்களன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக அமமுகவினரை, அதிமுகவினர் தடுக்க இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 8 நபர்களின் மண்டை உடைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட 6- வது வார்டில் அதிமுக ஆதரவில் அதிமுக ஒன்றிய கழக செயலாளர் ஜெயகுணசேகரன் மருமகள் அபிநயா போட்டியிட, அவருக்குப் போட்டியாக அமமுகவைச் சேர்ந்த வீரபாண்டி என்பவரது மனைவி ராஜகுமாரி வேட்பாளராக களமிறங்கியிருக்கின்றார்.
இந்நிலையில், இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (31.12.2019) நடைபெற்ற நிலையில், அமமுகவைச் சேர்ந்த மூவர் கள்ள ஓட்டு போடமுயன்றதாக தெரிய வர ஒன்றிய செயலாளர் ஜெயகுணசேகரன் உள்ளிட்ட 8 பேர் அவர்களை தடுக்க முயன்றுள்ளனர்.
அப்போது இரு தரப்பும் விறகு கட்டைகளால் மோதிக்கொண்டது. இதில் ஜெயகுணசேகரன் உள்ளிட்ட சுபமாதவன், ராமன், பாண்டி, ஆறுமுகம், சிட்டாள், அன்பழகன் 7 பேரும் விறகு கட்டையால் தாக்கப்பட்டு மண்டை மற்றும் கை கால் உடைந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமமுக தரப்பில் வீரபாண்டி, சண்டி வீரன் மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பலத்த காயமுற்று காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து நாச்சியாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், "தொடக்கத்திலேயே ராஜகுமாரியை போட்டியிலிருந்து வாபஸ் பெற வைக்க அனைத்து முயற்சிகளும் எடுத்த நிலையில் தோல்வியில் முடிந்திருக்கின்றது. சம்பவத்தன்று கள்ள ஓட்டுக்களை அதிமுக தரப்பு போட்டு வந்த நிலையில், போட்டிக்கு அமமுகவினரும் கள்ள ஓட்டு போட முயற்சித்த நிலையில் அடிதடி ஏற்பட்டுள்ளது." என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இப்பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.