Skip to main content

சோடா குடித்துவிட்டு வருவதாக சென்ற மணமகன்... அதிர்ச்சியில் மணமகள் வீட்டார்

Published on 17/06/2019 | Edited on 18/06/2019

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும், கோட்டாரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலை நாகர்கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் மணமகன் திடீரென நள்ளிரவில் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மணமகள் வீட்டார் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.


 

Marriage Hall



ஆரல்வாய்மொழி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அந்த வாலிபர் சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். இவருக்கு, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண் பார்த்து வந்துள்ளனர். அப்போது கோட்டாரை சேர்ந்த இளம்பெண்யை பார்த்து முடிவு செய்து திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

நேற்று (ஞாயிறு) காலை நாகர்கோவிலில்  திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக கடந்த வாரம் அந்த வாலிபர் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தார். நேற்றுமுன்தினம் இரவு மருதாணி வைப்பு வைபவம் நடந்தது. இதில் இரு வீட்டாரும் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் உறங்க சென்றனர். மணமகனும்  அவரது அறைக்கு சென்றார்.

இரவு  11 மணியளவில் மணமகனுக்கு செல்போன் அழைப்பு வந்தது. போன் பேசியவாறு வீட்டில் இருந்து வெளியே வந்தவர், உறவினர்களிடம் வயிறு வலிக்கிறது.  சோடா குடித்து விட்டு வருகிறேன் என கூறினார். அப்போது நண்பர்  ஒருவரும்  துணைக்கு வருவதாக தெரிவித்தார். அவரை வர வேண்டாம் என கூறிய மணமகன்,  பைக்கில் தனியாக சென்றார்.


பின்னர் வெகு நேரமாகியும் மாப்பிள்ளை திரும்பி வரவில்லை. அவரது போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.  வீட்டில்  இருந்த உறவினர்களும் ஆளுக்கொரு திசையாக தேட தொடங்கினர். நேற்று காலை வரை அவர் கிடைக்க வில்லை. இதற்கிடையே திருமண நிகழ்ச்சிக்காக மணமகள் வீட்டார் தயாராகினர். ஆனால், மணமகன் மாயமான தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். காலை 8 மணி வரை தகவல் இல்லாததால், மணமகள் வீட்டார் ஆரல்வாய்மொழி காவல்  நிலையத்துக்கு  சென்று புகார் அளித்தனர். மணமகன் வீட்டாரும் தனது மகனை  காணவில்லை என்றனர்.

இருதரப்பு புகார்களையும் பெற்றுக்கொண்ட போலீசார், இதன்பேரில் வாலிபர் மாயம் என புகார் பதிந்து, மணமகன் வேறு பெண்ணுடன் காதல்  விவகாரத்தில் மாயமானாரா என   விசாரிக்கின்றனர்.


 

சார்ந்த செய்திகள்