நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி (14.10.2023) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்தக் கப்பலின் பயணக் கட்டணமாக 6 ஆயிரத்து 500 ரூபாயுடன் 18 சதவிதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து 7 ஆயிரத்து 670 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தச் சூழலில் முதல் நாளில் போதிய பயணிகள் வராததால், 75 சதவீத கட்டண சலுகையில் ரூ.2,375 ஜிஎஸ்டி 18 சதவீதம், ஸ்நாக்ஸ் என மொத்தமாக ரூ.2,803 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் இரண்டாம் நாளில் 7 பேர் மட்டுமே பயணம் செய்ய இருந்த நிலையில் கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் - காங்கேசன் துறைமுக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. குறைந்த அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதால் கப்பல் போக்குவரத்து சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை என கூறப்பட்டது. இதனையடுத்து கனமழையால் இந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியுடன் (20.10.2023) நிறுத்தப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்து. இதற்காக அந்தமானில் தயாரிக்கப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பல் மே 13 ஆம் தேதி (13.05.2024) நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலின் கீழ் தளத்தில் உள்ள சாதாரண வகுப்பில் 133 இருக்கைகளும், மேல் தளத்தில் பிரிமியம் வகை 27 இருக்கைகளும் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 5 ஆயிரமும், மேல் கீழ்தளத்தில் உள்ள இருக்கையில் பயணிக்க ஜிஎஸ்டி உடன் ரு. 7 ஆயிரத்து ஐநூறும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது பயணிகள் கட்டணம் செலுத்தி துரித உணவுகளை பெற்றுகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த கப்பலில் பயணம் செய்ய பல்வேறு தேதிகளில் பலரும் முன்பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு செல்லும் பயணிகள் கப்பல் சேவை மே 13 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மே 17 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்திற்கு புதிய கப்பல் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்ட தேதியில் பயணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 16 ஆம் தேதி வரை பதிவு செய்தோர் கட்டணத்தை திரும்ப பெற விரும்பினால் customercare@sailindsri.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.