Skip to main content

அ.தி.மு.க.விலிருந்து சசிகலாவை நீக்க வேண்டும்; கொ.ம.தே.க. ஈஸ்வரன் வலியுறுத்தல்

Published on 11/09/2017 | Edited on 11/09/2017

அ.தி.மு.க.விலிருந்து சசிகலாவை நீக்க வேண்டும்; 
கொ.ம.தே.க. ஈஸ்வரன் வலியுறுத்தல்

"அ.தி.மு.கவில் உட்கட்சி ஜனநாயகத்தை நிலைநாட்ட சசிகலாவை அக் கட்சியிலிருந்து நாளை நடைபெறும் பொதுக்குழுவில் நீக்க வேண்டும்" என்று  கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அவர் மேலும்,   ‘’தமிழக மக்களை அதிகம் கவர்ந்த எம்.ஜி.ஆர் அவர்களால் உருவக்கப்பட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அவர் மறைவிற்கு பிறகு ஜா அணி, ஜெ அணி என்று இரண்டு பிரிவுகளாக பிரிந்தாலும் குறுகிய காலத்தில் இரண்டும் இணைந்து செல்வி.ஜெயலலிதா தலைமையில் தொடர்ந்து சக்தி வாய்ந்த இயக்கமாக செயல்பட்டு வந்தது. எம்.ஜி.ஆர் 11 ஆண்டுகளும், ஜெயலலிதா 15 ஆண்டுகளும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இப்போது 1 ஆண்டும் ஆக மொத்தம் 27 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த இயக்கம். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து ஜெயலலிதா இறக்கும் வரை தனிமனித தலைமையிலேயே அந்த இயக்கம் நடந்து வந்திருக்கிறது. கட்சியில் இருக்கின்ற வேறு யாரும் கருத்துக்களை சொல்லவோ, தலைமையின் செயல்பாடுகளை விமர்சிக்கவோ முடியாது. அதை மீறி யாராவது தனி கருத்தை சொல்ல முற்பட்டால் கட்சியிலிருந்து தூக்கி வீசப்படுவார்கள். 

ஜெயலலிதாவோடு 30 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கி பழகியவர் என்ற முறையில் சசிகலாவும் அதேபோன்று ஏன் ஒருபடி மேலே சர்வாதிகார எண்ணத்தோடு செயல்படக்கூடியவராக இருந்தார். ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு அதிமுக சசிகலா அவர்களுடைய கட்டுப்பாட்டிலே வந்தது போல ஒரு தோற்றம் நிலவியது. மீண்டும் அந்த கட்சியில் கட்சியினரின் கருத்துக்கு மதிப்பளிக்க கூடிய ஜனநாயகம் வளர வாய்ப்பேயில்லை என்ற நிலை உருவானது. அடுத்து தொடர்ந்து நடந்த அதிரடி நிகழ்வுகளால் எதிர்பாராத மாற்றம் நிகழ்ந்தது. ஜெயலலிதா இருந்தவரை கட்சியை தன் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்த சசிகலா இன்றைக்கு அந்த கட்சியிலிருந்து நீக்கப்பட கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. பொதுமக்கள் பார்வையில் யாரை நீக்குகிறார்கள், யாரை நீக்கவில்லை என்பதை விட அண்ணா தி.மு.கவில் ஜனநாயக ரீதியாக கட்சியினரின் கருத்துக்கு மதிப்பளிக்க கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறதென்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது.

எந்தவொரு இயக்கத்திலும் கட்சி உறுப்பினர்களுக்கு சொந்த கருத்துக்களை தெரிவிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மக்களுக்கு கருத்து சுதந்திரம் வேண்டுமென்று போராடுகின்ற பல கட்சிகளில் கட்சிக்குள் கருத்து சுதந்திரம் இருக்கிறதா ? என்பது சந்தேகத்திற்குரியது. இன்றைய சூழ்நிலையில் அண்ணா தி.மு.கவில் எல்லா மட்ட தலைவர்களும் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். அது நல்லதா, கெட்டதா என்ற விவாதத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. ஒரு கூட்டு தலைமைதான் அண்ணா தி.மு.கவை வழிநடத்த வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 

ஒருவேளை சசிகலா அவர்களுடைய திட்டப்படி கட்சியை கைப்பற்றி இருந்தால் மீண்டும் கருத்து சுதந்திரத்திற்கான வாய்ப்பே அந்த இயக்கத்தில் இல்லாமல் போயிருக்கலாம். இந்த சூழ்நிலையில் நாளை நடக்கின்ற அண்ணா தி.மு.கவினுடைய பொதுக்குழுவில் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவார்களா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களுக்கு எழுந்திருக்கிறது. மக்களுடைய எதிர்ப்பை சம்பாதித்திருக்கின்ற சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் மட்டுமே அந்த கட்சியினரின் கருத்து சுதந்திரம் தொடரும். மறுபடியும் அந்த இயக்கம் தனிமனித ஆதிக்கத்திற்குள் சென்றுவிடாமல் இருக்கும்.

 நாளை நடக்கின்ற பொதுக்குழுவில் சசிகலா அவர்களை நீக்குகின்ற முடிவில் அ.தி.மு.கவை நிர்வகிக்கின்ற தலைவர்கள் உறுதியாக இருக்க வேண்டுமென்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள். தமிழகத்தை 27 ஆண்டுகள் ஆண்டிருக்கின்ற அண்ணா தி.மு.கவின் பொதுக்குழு உறுப்பினர்கள் நழுவ விட்டுவிடக்கூடாது. அண்ணா தி.மு.க நல்ல கட்சியா ? அந்த கட்சி சார்பாக இன்று தமிழகத்தை ஆள்பவர்கள் நல்லவர்களா ? என்ற விசயத்திற்குள் எல்லாம் செல்லாமல் தமிழகத்தின் ஒரு பிரதான கட்சியில் ஜனநாயகம் இருக்க வேண்டுமென்ற ஒரே நினைப்பில் இந்த கருத்துக்களை தெரிவிக்கின்றோம்." என கூறினார் ஈஸ்வரன்.

- ஜுவாதங்கவேல்

சார்ந்த செய்திகள்