தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசரை மாற்றிவிட்டு புதிய தலைவராக ப.சிதம்பரத்தின் பரிந்துரையில் கே.எஸ்.அழகிரியை நியமித்திருக்கிறார் ராகுல். இவருக்கு உதவியாக வசந்தகுமார், டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரை கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, கூடுதலாக மோகன் குமாரமங்கலத்தை செயல் தலைவராக ராகுலின் ஒப்புதலுடன் நியமித்திருக்கிறார் காங்கிரசின் பொதுச்செயலாளர் வேணுகோபால்.
இது குறித்து நம்மிடம் பேசும் கதர்சட்டை தலைவர்கள் " தேர்தல் நேரம் என்பதால் தமிழக காங்கிரஸில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை பதவியில் அமர்த்தி தேர்தல் பணிகளை பிரித்து தர வேண்டும் என தீர்மானித்தே செயல் தலைவர்களை நியமித்திருக்கிறார் ராகுல். அதன்படி, நாடார் சமூகத்தை சேர்ந்த வசந்தகுமார், தலித் சமூகத்தை சேர்ந்த ஜெயக்குமார், வன்னியர் சமூகத்தை சேர்ந்த விஷ்ணுபிரசாத், தேவர் சமூகத்தை சேர்ந்த மயூரா ஜெயக்குமார் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்பட்டது.
இந்த நிலையில், கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்திற்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் இருப்பதை ராகுலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த மோகன் குமாரமங்கலத்தை நியமித்துள்ளார் ராகுல் காந்தி. பொதுவாக, வட இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் ஆதரவை பெறும் வகையில் அவர்களுக்கான சாதி அரசியலை தேர்தல் காலத்தில் கையாளுவது மோடியின் வியூகமாக இருக்கும். அதே பாணியை கடைப்பிடிக்கும் வகையில் பெரும்பான்மை சமூகத்தினருக்கு பதவி கொடுத்து தேர்தல் பணிகளைப் பிரித்து தர ராகுல் திட்டமிட்டுள்ளார். அதற்கேற்ப தமிழகத்தை பல மண்டலங்களாகப் பிரித்து செயல் தலைவர்களின் கட்டுப்பாட்டில் தேர்தல் பணிகளை ஒப்படைக்கலாமா ? என டெல்லியில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது " என்கின்றனர்.