அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவையின் நிறுவனர் தமிழ்மாமணி தாழை. இரா. உதயநேசன் தனது ஐந்து நூல்களைத் தமிழ்நாட்டில் வெளியிடுகிறார்.
‘செவத்த இலை’, ‘கலைக்கப்பட்ட கனவுகள்’, ‘மர்மங்களின் மறுபக்கம்’, ‘தொடுவானம்’ ஆகிய 4 சிறுகதைத் தொகுதிகளையும், ‘தமிழே விதையாய்’ என்னும் கவிதை நூலையும் ஒரே நேரத்தில் படைத்திருக்கிறார் உதயநேசன். மகாகவி ஈரோடு தமிழன்பன் தலைமையில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி அன்று சென்னையில் இந்த நூல்கள் வெளியிடப்படுகின்றன.
கவிஞர்கள் அமுதா, வடசென்னை தமிழ்ச்சங்க இளங்கோவன், ஷக்தி, முனைவர் சம்பத், லதா சரவணன், சிவமணி, சாம்பவி சங்கர், நீலகண்ட தமிழன், பேச்சியம்மாள் பிரியா, கனகா பாலன், அன்புச்செல்வி சுப்புராஜ், வெ. பாஸ்கரன் ஆகியோர் நூல்களை வெளியிட்டும், பெற்றுக்கொண்டும் உரையாற்ற இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் முனைவர் ஆதிரா முல்லை, சின்னத்திரை நட்சத்திரம் கவிஞர் ரேகா, பேரா. மணிமேகலை சித்தார்த்தன் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வாழ்த்துகின்றனர். இதே நிகழ்ச்சியில் கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரத்தின் ‘பூக்கள் பூக்கும் தருணம்’, கவிஞர் சரஸ்வதி பாஸ்கரனின் ‘ஊஞ்சலாடும் உறவுகள்’ ஆகிய நூல்களும் வெளியிடப்பட இருக்கின்றன. உதயநேசன் ஏற்புரையும், செயலுரையும் ஆற்றுகிறார்.
அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளரான உதயநேசன், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள தாழையாத்தம் என்ற ஊரில் பிறந்தவர். தற்போது, வட அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில், இண்டியானாபோலிஸ் நகரில் அவர் வசித்துவருகிறார். இவருக்கு மனைவி, மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இண்டியானா பல்கலைக்கழக மருத்துவமனையில் உளவியல் ஆலோசகராக இவர் பணியாற்றிவருகிறார்.
வட அமெரிக்காவில் வசித்தாலும், தான் பிறந்து வளர்ந்த மண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று தனது சொந்த ஊரில், மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாலை நேர டியூசன் வகுப்புகளைத் தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார். குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு பகுதியில் உள்ள ஏறத்தாழ 100 மாணவ, மாணவிகளுக்கு இலவச வகுப்புகளை நடத்தச் செய்வதோடு, அவர்களுக்குத் தினசரி இரவு உணவும் வழங்கச் செய்திருக்கிறார் உதயநேசன்.
மேலும், ஆம்பூர் பகுதியில் ஏழை எளிய பெண்களுக்காக இலவச தையல் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். ஆண்டுதோறும் பத்து பெண்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, முடிவில் எல்லோருக்கும் இலவச தையல் எந்திரமும் வழங்கி, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்துவருகிறார்.
அப்துல் கலாம் விருது, இந்திரா காந்தி விருது, ஜெயகாந்தன் விருது, வ.ஊ.சி விருது, கவிமணி விருது என எண்ணற்ற விருதுகளையும் உதயநேசன் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ’கலை உதயம்’ பதிப்பகத்தையும் அவர் இங்கு தொடங்குகிறார். அமெரிக்க வாழ் தமிழ் எழுத்தாளர் உதயநேசனின் சமூகம் மற்றும் இலக்கியத் தொண்டினைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.