தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் துணை முதல்வர் ஒபிஎஸ்சின் தம்பியான ஓ.ராஜா தனது ஆதரவாளர்களை வைத்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார் என்று தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பெரியகுளம் நகர செயலாளரான துரை அம்பலப்படுத்தி வந்ததுடன் மட்டுமல்லாமல் எஸ்.பி.முதல் கலெக்டர் வரை புகார் கொடுத்தும் இருக்கிறார்.

இந்நிலையில்தான் நேற்று இரவு அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் துரைதாக்கப்பட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமுருகன்ஜி காதுக்கு எட்டவே உடனே பெரியகுளம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் துரையை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன்பின் பெரியகுளம் மூன்றாந்தல் காந்திசிலை முன்பு வந்த திருமுருகன்ஜி தலைமையிலான அக்கட்சியை சேர்ந்த 150-க்கு மேற்பட்டோர் துரை மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரியகுளம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த விஷயம் போலீசார் காதுக்கு எட்டவே உடனே ஸ்பாட்டுக்கு விசிட் அடித்து மறியலில் ஈடுபட்டு இருந்த பார்வர்டு பிளாக் கட்சியினரை சமாதானம் செய்து பஸ் மறியலை கைவிடச் செய்தனர். அதன்பின் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமுருகன்ஜி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது...
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மணல் கடத்துவதற்கு அடியாட்களாக இருக்க கூடிய கைலாசபட்டியை சேர்ந்த குண்டாஸ் சுரேஷ் மற்றும் நாய் சேகர், கணேஷ் மகன் சசி ஆகிய குண்டர்கள்தான் துரை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொலை வெறி தாக்குதலுக்கு துணை போன துணை முதல்வர் ஒபிஎஸ்சின் தம்பி ஒ.ராஜா மீதும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்படி அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் உடனே முன் வர வேண்டும் தவறினால் மாநில அளவில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்து விட்டு சென்றார்.

ஏற்கனவே ஒபிஎஸ் தம்பி ஒ.ராஜா மீது கைலாசபட்டியை சேர்ந்த பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பெரியகுளம் நகர செயலாளர் துரை மீது தனது ஆதரவாளர்களை வைத்து தாக்குதல் நடத்தி இருப்பது முக்குலத்தோர் சமூகத்துக்குள்ளேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.