தமிழகத்தில் பயங்கரவாதம் பெருகிவிட்டது எனும் மோடியின் பேச்சு பொறுப்பற்றத்தனமானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே செங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பிரதமர் மோடி தமிழகத்திற்குக் கொண்டு வந்த ஒரே ஒரு நல்ல திட்டத்தைச் சொல்லச் சொல்லுங்கள். பார்க்கலாம். அவர்கள் கொண்டு வருவது எல்லாமே நலத்திட்டங்கள் என்றால் அதனை எதற்காக கேரளாவிற்கோ, ஆந்திராவிற்கோ, கர்நாடகாவிற்கோ கொண்டு செல்வதில்லை. எட்டுவழிச் சாலையை அமைத்தே தீருவேன் என்று பாராளுமன்றத்தில் பேசுகிற அமைச்சர்கள் ஒருவர்கூட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீருவேன் எனக் கூறவில்லையே.? தமிழகத்தில் பயங்கரவாதம் பெருகிவிட்டது என்கிறார் பிரதமர் மோடி. சொந்த மாநில மக்களைப் பல்லாயிரக்கணக்கில் கொலைசெய்துவிட்டு, அவர்களின் சாவை காரில் நாய் அடிப்பட்டால் எவ்வாறு உணர்கிறேனோ அவ்வாறு உணர்கிறேன் என்று சொல்வதைவிட ஒரு பயங்கரவாத மனநிலையுண்டா? எதற்கெடுத்தாலும் தமிழகத்தில் பயங்கரவாதம் பெருகிவிட்டது என்கிறார்கள். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தவிர வேறு யார் ஆயுதத்தை வைத்துப் பயிற்சி எடுக்கிறார்கள்.? எனவே, இதுகுறித்தான பிரதமர் மோடியின் பேச்சு பொறுப்பற்றத்தனமாக இருக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வருவோம் என்கிறார்கள். ஐந்தாண்டு கால ஆட்சியே முடியப் போகிறது. இனி எப்போது கொண்டுவரப் போகிறார்கள்.? அம்மையார் ஜெயலலிதா இருந்தபோது அதனை அமைப்பதற்கென 4 மருத்துவமனைகளைத் தேர்வுசெய்து அறிவித்தார்கள். அப்போது கொண்டுவராது, இப்போது கொண்டு வருவேன் எனக் கூறுவது வாக்குகளைப் பெறுவதற்காகத்தானே? எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த வெற்று வார்த்தைகள்தான் வருகிறதோ ஒழிய, அதனை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தையே இவர்கள் தொடங்கவில்லை.
நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும். வாக்குச்சீட்டு முறையிலே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை மிக நியாயமானது. அதனை நாங்கள் வரவேற்கிறோம். மின்னணு வாக்குப் பதிவு முறையைக் கண்டறிந்த அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளுமே அதனைக் கைவிட்டு விட்டது. நைஜீரியாவும், இந்தியாவும்தான் இன்னும் அம்முறையைக் கடைபிடித்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு கூறினார்.