அயோத்தி வழக்கின் தீர்ப்பையொட்டி தள்ளி வைக்கப்பட்டிருந்த இரண்டாம் நிலைக் காவலர்களுக்கான உடல்தகுதி, உடல்திறன் தேர்வுகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கின.
தமிழக காவல்துறையில் ஆயுதப்படை, சிறப்புக்காவல் படை மற்றும் தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகிய துறைகளில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் நிலையிலான 8888 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்திறன் மற்றும் உடல் தகுதி தேர்வுகள், சீருடைப்பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் கடந்த நவ. 6ம் தேதி தொடங்கியது.
தமிழகம் முழுவதும் 15 மையங்களில் முதல் மூன்று நாள்கள் இத்தேர்வுகள் நடந்தன. இந்நிலையில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்க இருந்ததால், இரண்டாம்நிலை காவலர்களுக்கான உடல்திறன், உடல்தகுதி தேர்வுகள் திடீரென்று தள்ளிவைக்கப்பட்டன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் 15 மையங்களில் உடல்த குதி மற்றும் உடல்திறன் தேர்வுகள் திங்கள்கிழமை (நவ. 18) முதல் மீண்டும் தொடங்கியது.
சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில், காலை 6 மணியளவில் பெண்களுக்கு உடல்தகுதி தேர்வு தொடங்கியது. சேலம் மாநகர், சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 612 பெண்களுக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர்களில் 545 பெண்கள் மட்டுமே உடல்தகுதி தேர்வுக்கு வந்திருந்தனர்.
இவர்களுக்கு 400 மீட்டர் ஓட்டம் மற்றும் உயரம் சரிபார்க்கப்பட்டது. சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், சேலம் சரக டிஐஜி பிரதீப் குமார் மற்றும் சேலம் மாவட்ட எஸ்பி தீபா கணிகர் ஆகியோர் கண்காணித்தனர். செவ்வாய்க்கிழமை (நவ. 19, 2019) காலை முதல் கயிறு ஏறுதல் திறன் தேர்வு நடந்து வருகிறது. 5 மீட்டர் முதல் 6 மீட்டர் வரை கயிறில் ஏற வேண்டும்.
கயிறு ஏறுதல் உடல்திறன் தேர்வில் 800க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். பலர், கயிறு ஏற முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இது தவிர, 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டத் தேர்வும் நடந்து வருகிறது. நவ. 21ம் தேதி வரை உடல்தகுதி, உடல்திறன் தேர்வுகள் நடக்கின்றன. அதையடுத்து நவ. 22 மற்றும் 23ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.