காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த 14.12.2024 அன்று காலை 10:12 மணியளவில் காலமானார்.
முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மறைவுக்கு பிறகு மீண்டும் தொகுதி காலியாகி உள்ளது. இதனால் விரைவில் அதிகாரப்பூர்வமாக ஈரோடு கிழக்கு காலி தொகுதியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய்க்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ஈரோட்டில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.