அரியலூர் மாவட்டம், குழுமூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (வயது 55) இம்மாதம் ஏப்ரல் 4ஆம் தேதி சாலை விபத்தில் படுகாயமடைந்தார். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் மேல் சிகிச்சைக்காக ஏப்ரல் 5ஆம் தேதி காலை திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி காலை மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில் உடல் உறுப்பு தானம் குறித்து அவரது குடும்பத்தாருக்கு மருத்துவமனை சார்பில் விளக்கிக் கூறப்பட்டது. மூளைச்சாவு அடைந்த அவரிடமிருந்து உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து அதனை தானமாக கொடுப்பதற்கு இளங்கோவன் குடும்பத்தினர் முழு சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து மூளைச்சாவு அடைந்த அவரது உடலிலிருந்து உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையத்தின் நெறிமுறைகளின்படி, நேற்று அவரது சிறுநீரகம் ஒன்று திருச்சி அரசு மகாத்மா காந்தி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலிக்கும், கல்லீரல் மதுரைக்கும், கண்கள் திருச்சியை சேர்ந்த இருவருக்கும், இருதயம் சென்னைக்கும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் மருத்துவர் வனிதா கூறியதாவது; “மூளைச்சாவு அடைந்த நபர் உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் ஒருவர் 8 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து உறுப்புகள் தானமாக அறுவை சிகிச்சை மூலம் பெறப்பட்ட முதல் நிகழ்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கரோனா பெரும் தொற்று காலத்தில் நடைபெற்றது. தற்போது உறுப்புகள் தானமாக பெறப்பட்டது திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற 2வது நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது. உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய இளங்கோவனின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுமக்கள் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பெற்று மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் பலருக்கும் மறுவாழ்வு கிடைக்கும் என்பதனை மனதில் நிறுத்தி உடல் உறுப்பு தானம் செய்வதற்கு முன்வந்து உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றிட வேண்டும்” என கூறினார்.