தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே சசிகலா அரசியல் துறவரம் செல்கிறார் என்று நக்கீரன் இதழில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சசிகலா அறிக்கை வெளியிட்டார். அதே போல கடந்த வாரம் துறவரத்தில் இருந்த சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருகிறார் என்று நக்கீரன் இதழில் வெளியானது.
இந்த நிலையில் சிறையில் இருந்த போது கடிதம் மூலம் தொடர்புக் கொண்ட அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் தொலைபேசி மூலம் சசிகலா பேசி வருகிறார். இது தொடர்பான ஆடியோவும் வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "வருவேன்; அ.தி.மு.க.வை சரி செய்வேன்" என்று பேசும் அவரது பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த உரையாடல் ஆடியோக்களைக் கேட்ட பிறகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் சசிகலா கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறார்.அ.ம.மு.க.வினரிடம் பேசுவதை அ.தி.மு.க.வினர் என்று சொல்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று (05/06/2021) அ.தி.மு.க.வின் புதுக்கோட்டை நகர இணைச் செயலாளர் பூரண ஆறுமுகம் என்பவரிடம் சசிகலா தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது தொலைபேசியில் பேசிய பூரண ஆறுமுகம், "நான் தலைவர் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியது முதல் கட்சியில் இருக்கிறேன். தலைவரை நீக்கிய போதும், அம்மாவை சட்டமன்றத்தில் அவமானம் செய்த போதும் மறியல் செய்து சிறைக்கு போனவன். நீங்க சிறைக்கு போனப்பவும் அதே மனநிலையில் தான் இருந்தேன். நீங்க வெளியே வந்தப்ப வரவேற்று போஸ்டர் அடிச்சேன். ஆனால் 'துரோகிகள் சேர்ந்து எங்களை வாழவிடல' இப்ப கூட அ.ம.மு.க.வின் நகர செயலாளர் வீரமணி கூட நெருக்கமாக தான் இருக்கிறேன். என் மகன் செந்தில்குமார் அ.ம.மு.க. மாவட்ட பிரதிநிதியாக இருக்கிறார். நீங்க கட்சிக்கு வரனும் கட்சியைக் காப்பாற்றனும்" என்று பேசினார்.
அதைத் தொடர்ந்து, அவரிடம் பேசிய சசிகலா, "நிச்சயம் வருவேன். கட்சியை சரி பண்ணி அம்மா (ஜெ) கொண்டு போனது போல செய்வேன். விரைவில் எல்லோரையும் சந்திக்கிறேன். கட்சியை நல்லா கொண்டு போகனும். அதனால தான் ஆரம்ப கால கட்சிக்காரங்களிடம் பேசுறேன்" என்றார்.