








பெங்களூருவின் தேவனஹள்ளியில் இருந்து சாலை மார்க்கமாக காரில் சென்னை திரும்பினார் சசிகலா. சென்னை திரும்பிய சசிகலாவுக்கு அ.ம.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்திற்கு வருகை தந்த சசிகலாவுக்கு எம்.ஜி.ஆரின் குடும்பத்தினர் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை ஆன இளவரசியும் காரில் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய சசிகலா, இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லத்தில் தங்குகிறார்.
நான்கு ஆண்டு சிறைத்தண்டனை, கரோனா தனிமைப்படுத்துதல் முடிந்ததைத் தொடர்ந்து சசிகலா சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.