
ஈரோட்டில் நிதி நிறுவனத்தின் கதவை உடைத்து ரூ.1.40 லட்சம் திருடப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு பெரியசேமூர் ராசாம்பாளையம் 6-வது வீதி தென்றல் நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (56). இவர், ஈரோடு நேதாஜி நகர் திரு.வி.க.வீதியில் பைனான்ஸ், சிட்பண்ட் நடத்தி வருகிறார். கடந்த 5ம் தேதி அய்யப்பன் ஏலச்சீட்டுக்கு வசூலான பணத்தை அவரது நிறுவனத்தில் உள்ள மேஜை டிராவில் வைத்து பூட்டி விட்டு, வீட்டுக்கு சாப்பிட சென்றார். பின்னர், அய்யப்பன் அன்றைய தினம் மாலை நிறுவனத்திற்கு வந்து பார்த்தபோது, நிறுவனத்தின் கண்ணாடி கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அய்யப்பன் உள்ளே சென்றார். அங்கு மேஜை டிராயர் திறக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அய்யப்பன் ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுற்றுப்புற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ஈரோடு சம்பத் நகர்ப் பகுதியில் வீரப்பன் சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும்படியாக நடந்து வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். ஆனால், அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில், அந்த நபர் திருப்பூர் கூட்டம்பாளையம் ஜெ.பி. நகரை சேர்ந்த பெருமாள் மகன் இசக்கிமுத்து (34) என்பதும், நேதாஜி நகரில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தின் கதவை உடைத்து பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இசக்கிமுத்து மீது திருப்பூர் அனுப்பர்பாளையத்திலும், திருப்பூர் சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனிலும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.