கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடி ஊராட்சியில் முத்தையா நகர் உள்ளது. இந்த நகரில் செம்மையான முறையில் உயிரைப் பொருட்படுத்தாமல் கிருமிநாசினி தெளித்து அப்பகுதி மக்களைப் பாதுகாத்து வரும் தூய்மைப் பணியாளர்களின் தன்னலமற்ற பணிகளை மதிக்கும் வகையில் அவர்களுக்குச் சொந்த செலவில் நிவாரணம் வழங்க அப்பகுதியில் வசிக்கும் செல்வம்- நாகராணி தம்பதியினர் முடிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தம்பதியினர், நகரில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருந்தப் பணியாளர்களை வீட்டுக்கு அழைத்து வீட்டின் வாசலில் அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து, அனைத்து தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி, மலர் தூவி, கழுத்துக்கு மாலை அணிவித்து பாதபூஜை செய்து சால்வை போர்த்தி கௌரவித்தனர்.
மேலும் இந்தச் சூழலில் வீட்டை விட்டு வெளியே துணிச்சலாக வந்து பொதுமக்களைக் காக்கும் பணிகளைச் செய்யும் உங்களின் பணிகள் பாராட்டுக்குரியது என்று வாழ்த்தி அரிசி, காய்கறி ,மளிகை உள்ளிட்ட அத்தியாவாசியப் பொருட்களை அவர்களுக்கு வழங்கினர். இது அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இதுபோல் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. மேலும் தம்பதியினர் தூய்மைப் பணியாளர்களின் சேவையை மதிக்கவேண்டும் என்று அனைவரிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனையறிந்த பலர் செல்வம்- நாகராணி தம்பதியினரை தொலைபேசி மற்றும் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.
அதேபோல் ஊராட்சியில் உள்ள சரஸ்தி அம்மாள் நகரில், சரஸ்வதி அம்மாள் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நகரில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, மளிகை என ஒரு மாதத்திற்கு வேண்டிய அத்தியவாசியப் பொருட்கள் வழங்கபட்டது. மேலும் நகரில் வசிக்கும் செவிலியர்களுக்கு உயர் ரக முகக் கவசம், கிருமி நாசினி வழங்கி அவர்களின் பணிகள் கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிகுமார், பொருளாளர் கோபி உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.