சேலத்தில், டம்மி துப்பாக்கியைக் காட்டி நகைக்கடை அதிபரிடம் 6.55 லட்சம் ரூபாய் பணம் பறித்த ஐந்து பேர் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் பொன்னம்மாபேட்டை அண்ணா நகர் 4ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (37). அங்குள்ள தண்ணீர் தொட்டி பகுதி அருகே, ரமணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் சிறிய அளவில் நகைக்கடை நடத்தி வருகிறார். பழைய நகைகளை வாங்கி விற்று வந்தார். இவருடைய நண்பர் மணி. நகை மதிப்பீட்டாளர்.
அம்மாபேட்டை பச்சைப்பட்டியைச் சேர்ந்தவர் தனுஷ் என்கிற சிங்கம் சேகர் என்கிற தனசேகர் (34). வட்டித்தொழில் செய்து வந்தார். இவரும், நகை மதிப்பீட்டாளர் மணியும் நண்பர்கள். இந்தப் பழக்கத்தின் அடிப்படையில் தனசேகர் தன்னிடம் உள்ள 20 பவுன் பழைய தங்க நகைகளை, கார்த்திடம் விற்றுப் பணம் வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதுகுறித்து மணி, கார்த்திக்கிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் கார்த்திக்கை செல்போனில் தொடர்பு கொண்ட தனசேகர், தன்னிடம் உள்ள 20 பவுன் பழைய நகைகளுக்கு 6.55 லட்சம் பணம் கொடுத்தால் போதும் என்றதோடு, அம்மாபேட்டை குலசேகர ஆழ்வார் தெருவில் உள்ள ஒரு வீட்டைக் குறிப்பிட்டு அங்கே வருமாறு கூறியுள்ளார். இதை நம்பிய மணியும், கார்த்திக்கும் செல்போனில் பேசியபடி பணத்துடன் அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) இரவு சென்றனர்.
அந்த வீட்டில் தனசேகரன் மட்டுமின்றி அவருடைய கூட்டாளிகள் நான்கு பேரும் இருந்துள்ளனர். நகைகளை ஒரு சிறிய பெட்டியில் கொண்டு வந்து காட்டிய தனசேகர், மீண்டும் பெட்டியை உள்ளே வைத்துக்கொண்டார். அதைப்பார்த்து சந்தேகம் அடைந்த மணி, நகைகளை உரசிப்பார்த்து பரிசோதனை செய்த பிறகுதான் பணம் தர முடியும் எனக்கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் மணியை தாக்கினர்.
மேலும், கார்த்திக்கையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிடுமாறு மிரட்டினர். அதற்கு அவர் மறுத்ததால், அந்தக் கும்பல் அவருடைய தலையில் சுத்தியலால் தாக்கியுள்ளது. இதனால் அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. இருவரும் மூர்ச்சையாகி விழுந்ததால், அவர்களிடம் இருந்த 6.55 லட்சம் பணத்தைப் பறித்துக்கொண்டு அந்தக் கும்பல் தப்பி ஓடினர்.
மயக்கம் தெளிந்த மணி, இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறைக்கு தகவல் அளித்தார். காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். கார்த்திக்கை, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அஸ்தம்பட்டி சரக காவல்துறை உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையில், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் எஸ்.ஐ.,க்கள், காவலர்கள் கொண்ட தனிப்படையினர் குற்றவாளிகளை நாலாபுறமும் தேடினர். முக்கிய குற்றவாளியான தனுஷ் என்கிற தனசேகரின் செல்போன் சிக்னல், சேலம் மாநகருக்குள்தான் அவர் இருப்பதை உறுதி செய்தது. மின்னல் வேக வேட்டையில் தனசேகர் உள்ளிட்ட ஐந்து பேரையும் தனிப்படையினர் அடுத்த நான்கு மணி நேரத்தில் இரவோடு இரவாகத் தூக்கினர்.
பிடிபட்ட கும்பலை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ரமணா ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கார்த்திக்கிடம் கணக்கில் வராத கருப்புப்பணம் நிறைய இருப்பதாகவும், அதை வைத்துக் கொண்டுதான் பழைய தங்க நகைகளை வாங்கி விற்று லாபம் சம்பாதித்து வருவதாகவும் ஒரு தகவல் தனசேகருக்கு கிடைத்திருக்கிறது. அவர் சிறிய அளவில் வட்டித்தொழில் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நகை மதிப்பீட்டாளர் மணி அண்மையில், தனுஷிடம் 1.50 லட்சம் ரூபாய் கடன் கேட்டுச்சென்றிருந்தார். அப்போது தனுஷ், தன்னிடம் இப்போதைக்கு அவ்வளவு பணம் இல்லை என்றதோடு, கரோனாவால் வட்டித் தொழிலில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். மணி மூலமாக கார்த்திக் பற்றிய மேலும் சில விவரங்களையும் தனசேகர் கேட்டுத் தெரிந்து கொண்டார். இதையடுத்து மணியை முதலில் வரவழைத்து, அவர் மூலமாக கார்த்திக்கையும் மிரட்டி பணத்தைப் பறித்துவிட அவர்கள் திட்டம் போட்டிருந்தனர்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவே அமேசான் ஆன்லைன் மார்க்கெட்டில் ஏர்கன் ஒன்றை சில நாள்களுக்கு முன்பு விலைக்கு வாங்கியுள்ளார் தனசேகர். அதன்படியே திட்டத்தை அவர்கள் செயல்படுத்தி இருக்கிறார்கள். இதுதான் அவர்களுக்கு முதல் குற்ற நடவடிக்கை என்பதால் நான்கைந்து மணி நேரத்திற்குள்ளாகவே காவல்துறை வசம் சிக்கிக் கொண்டனர். மேலும், முக்கிய குற்றவாளியான தனசேகர் நகை மதிப்பீட்டாளருக்கு அறிமுகமானவர் என்பதாலும், அவர்களை விரைந்து கைது செய்ய முடிந்திருக்கிறது.
நகைக்கடை உரிமையாளரிடம் டம்மி துப்பாக்கி முனையில் பணம் பறித்த சம்பவத்தில் தனுஷ் என்கிற சிங்கம் சேகர் என்கிற தனசேகர் (34) மற்றும் அவருடைய கூட்டாளிகளான நெத்திமேடு காத்தாயி அம்மன் நகரைச் சேர்ந்த சுந்தரராஜன் மகன் நவீன்குமார் (24), அம்மாபேட்டை முராரி வரதய்யர் தெருவைச் சேர்ந்த சேஷாத்திரி மகன் சேகர் (36), அதே தெருவைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் பார்த்தசாரதி (38), மணியனூர் காத்தாயி அம்மாள் நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மணி என்கிற மணிகண்டன் (25) ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இன்னும் ஓரிரு நாள் தாமதித்து இருந்தாலும்கூட, பணத்தை அவர்கள் செலவழித்து இருப்பார்கள் என்றும், முழுமையாக பறிமுதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் என்கிறார்கள் காவல்துறையினர். நகைக்கடை உரிமையாளரை மிரட்டப் பயன்படுத்திய டம்மி துப்பாக்கி மற்றும் கார்த்திக்கிடம் பறித்த 6.55 லட்சம் ரூபாய் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் சேலம் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.