சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இன்று (02/10/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 8,343 கனஅடியிலிருந்து 14,119 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு 6,000 கனஅடியாக உள்ளது. அதேபோல், அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.13 அடியாகவும், நீர்இருப்பு 61.18 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது.
இதனிடையே, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 10,000 கனஅடியிலிருந்து 15,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்துக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.