சேலம் அருகே, கணவரை இழந்த பெண்ணை திருமணம் செய்வதாகக்கூறி கழுத்து நெரித்துக்கொலை செய்த தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்தவர் கலா (25). இவருடைய கணவர் செல்வம், இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை. ஆதரவு யாரும் இல்லாததால், கலா கூலி வேலைக்குச் சென்று வந்தார். அதே ஊரைச் சேர்ந்த தறி தொழிலாளி குமார் என்பவருக்கும், கலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். பிறகு கலா, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு குமாரை அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு குமார் மறுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு கலாவை திருமணம் செய்து கொள்வதாகக்கூறிய குமார், அவரை சேலம் அருகே உள்ள பெருமாள் கோயில் மேடு பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் கலாவை கழுத்தை நெரித்து கொன்றார். ஆனால் சடலத்தை அப்புறப்படுத்த தெரியாமல் தடுமாறிய அவர், இதுகுறித்து தனது உறவினர்களான ஆறுமுகம், முருகன் ஆகியோரிடம் சொல்லி, உதவிக்கு வருமாறு அழைத்தார். அவர்கள் உதவியுடன் சடலத்தை ஒரு சாக்குப்பையில் போட்டு, உத்தமசோழபுரம் பகுதியில் திருமணிமுத்தாற்றில் வீசிவிட்டு தலைமறைவாயினர்.
ஆரம்பத்தில் கலா மாயமாகிவிட்டதாக வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர், அவருடைய சலத்தைக் கைப்பற்றிய பிறகு கொலை வழக்காக பதிவு செய்தனர். இந்த வழக்கில் குமார், ஆறுமுகம், முருகன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட மூன்றாவது கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி இளங்கோ செவ்வாய்க்கிழமை (ஜூலை 30, 2019) தீர்ப்பு அளித்தார். கலாவை கொன்ற குமாருக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். சடலத்தை மறைக்க உதவிய குற்றத்திற்காக ஆறுமுகம், முருகன் ஆகிய இருவருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். குற்றவாளிகள் மூவரும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.