அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குற்றமற்றவர் என்பதை, ஜெயக்குமார் நிரூபிக்க தயாரா? என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் அடையாறில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது,
அமைச்சர் ஜெயக்குமார் விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீர்வு காணவே ஆடியோ வெளியானது. இதை நாங்கள் வெளியிடவில்லை. பிறந்த குழந்தையின் சான்றிதழை வைத்து முகவரியை அரசுதான் கண்டுபிடிக்க வேண்டும். எனக்கு வந்த தகவலின் அடிப்படையின் நன்கு ஆராய்ந்த பிறகே ஆடியோ வெளியிடப்பட்டதாக அறிகிறேன். அமைச்சர் ஜெயக்குமார் தனது தவறுகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் போல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து புகாரை சந்திக்க வேண்டும். இதில் கவர்னர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயக்குமார் அமைச்சர் பதவியில் இருந்து விலகினால் சம்பந்தப்பட்டவர் விளக்கம் அளிப்பார். ஜெயக்குமார் போல் பல அமைச்சர்களும் இருக்கிறார்கள்.
ஆடியோ விவகாரம் அனைத்தும் உண்மை, அமைச்சர் பதவியிலிருந்து ஜெயக்குமாரை நீக்க வேண்டும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குற்றமற்றவர் என்பதை, ஜெயக்குமார் நிரூபிக்க தயாரா? அதிகாரத்தில் உள்ளவர் என்பதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் புகார் அளிக்க பயப்படுகிறது. ஆடியோவை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு சொல்லமாட்டோம் என்றும் கூறினார்.