பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு மட்டுமின்றி கடல் கடந்தும் போராட்டங்கள் வெடித்துள்ளது.
கல்லூரி மாணவ, மாணவிகள் தொடர்ந்து வகுப்புகளை புறக்கணித்து காம கொடூரன்களுக்கு எதிராகவும் அவர்களை காப்பாற்ற துடிப்பவர்களுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இன்று புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி நுழைவாயிலில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பதாகைகளுடன் முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அரசு வழக்கறிஞர் ராமநாதன் மாணவிகளிடம் சென்று போராட்டம் நடத்தக் கூடாது உள்ளே போங்கள் என்று மிரட்ட.. பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டங்கள் தொடரும் என்று சொன்னதுடன்.. நீங்கள் யார் எங்களை மிரட்ட என்று மாணவிகள் கேட்க.. நான் பெற்றோர் என்றார். அதன் பிறகும் கல்லூரி கதவுகளை நிர்வாகம் மூடியது. ஆனால் போராட்டத்தை மாணவிகள் தொடர்ந்தனர்.
அப்போது அங்கு வந்த டி.எஸ்.பி. ஆறுமுகம்.. மாணவிகளிடம் உடனே எல்லாரும் வகுப்புகளுக்கு போங்க என்று அதிகார தொணியில் கூறியதுடன் ஆயிரம் போலிசை கொண்டு வருவேன் என்றார். அதன் பிறகும் மாணவிகள் போராட்டத்தை கைவிடவில்லை.
இந்த நிலையில் மாணவிகளுக்கு துணையாக மாணவர்களும் வந்தனர். அப்போது அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. செல்வராஜ்.. போராட்டக் களத்தில் மாணவிகளை வழிநடத்திக் கொண்டிருந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் அரவிந்தசாமியை பளார் என அறைந்தார். அடுத்து அருகில் நின்ற போலிசார் மாணவிகளுக்கு துணையாக நின்ற மாணவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போலிஸ் வேனில் ஏற்றி வேனை எடுக்க முயன்றனர் போலிசார்.
இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த மாணவிகள் மாணவர்களை கைது செய்து ஏற்றப்பட்ட வேனை முன்னாலும் பின்னாலும் மறித்து சாலையில் அமர்ந்து போலிசாருக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது பெண் போலிசார் இல்லாமலேயே ஆண் போலிசாரே மாணவிகளை தள்ளினார்கள்.
எஸ்பி.யால் தாக்கப்பட்ட அரவிந்தசாமியை சக தோழர்கள் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த தகவல் அறிந்த புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து காவல் துறைக்கு எதிராகவும் பொள்ளாச்சி சம்பவத்திற்கு நீதி கேட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி சம்பவத்திற்காக போராடிய அரவிந்தசாமியை தாக்கிய சம்பவம் காட்டுத்தீயாக பரவியதால் நாளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக மாதர் சங்கம், மாணவர் சங்கம், வாலிபர் சங்கங்கள் அறிவித்துள்ளது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கூறினார். மேலும்.. பொள்ளாச்சியில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வரக் கூடாது என்பதற்காக மாவட்ட எஸ்.பியே பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை ஊடகங்களிடம் சொல்கிறார். தமிழக அரசு உத்தரவிலும் அந்த பெண்ணின் பெயரை வெளியிடுகிறார்கள். அதன் பிறகு எப்படி புகார் கொடுக்க முன்வருவார்கள் பெண்கள். இப்படி மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களை மிரட்டிவிட்டு இப்ப சி.பி.சிஐ.டி போலிசார் புகார் இருந்தாலும், ஆதாரம் இருந்தாலும் கொடுங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று சொல்கிறார்கள். இது எப்படி சாத்தியமாகும். முதலில் பிடிபட்ட 4 பேரிடம் இருந்த 10 க்கும் மேற்பட்ட செல்போன்களில் அழிக்கப்பட்ட பதிவுகளை மீட்க வேண்டும். அப்போது தான் முழு உண்மையும் வெளிவரும் என்றவர். இப்படி பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடிய மாணவர்களை வெறித்தனமாக தாக்கி, இழுத்துச் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாது. அதனால் தான் நாளை புதுக்கோட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகையிடப் போறோம். அதே போல கட்சி தலைமையின் அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் இந்தச் சம்பவத்திற்காக போராட்டங்கள் நடத்துவோம் என்றார்.
பொள்ளாச்சி சம்பவத்தை முடக்க எத்தனை சம்பவங்களை நடத்துகிறார்கள்.