சேலத்தில் சினிமா பாணியில் திட்டமிட்டு வாலிபரை கடத்தி, அடைத்து வைத்து பணம் பறித்த சிறப்பு எஸ்ஐ உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் (20). தனியார் மருந்து நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த மின்னணு பொருள்களை விற்பனை செய்து வரும் பூபதி என்பவரிடம் புதிய செல்போன் வாங்கித்தர கேட்டிருந்தார். அதற்காக அவர் பூபதியிடம் 60 ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தார்.
ஆனால் பூபதி செல்போன் வாங்கித்தராமல் சாக்கு போக்குச் சொல்லி, காலம் கடத்தி வந்தார். இதையடுத்து பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி சக்திவேல் அடிக்கடி பூபதியிடம் கேட்டு வந்தார்.
இந்நிலையில் பூபதி, 'தான் புதிதாக 9 செல்போன்கள் கொண்ட பார்சலை தருகிறேன். அவற்றை எடுத்துச்சென்று, சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனது நண்பர்களிடம் கொடுத்தால், அவர்கள் அதற்குரிய பணம் தருவார்கள். நான் உனக்குத் தர வேண்டிய பணத்தை அதிலிருந்து எடுத்துக்கொள்,' என்று கூறியதோடு, செல்போன் பார்சலையும் அவரிடம் கொடுத்து அனுப்பினார்.
இதை நம்பிய சக்திவேல், துணைக்கு பிரபாகரன் என்ற நண்பரை அழைத்துக்கொண்டு செல்போன் பார்சலுடன் சேலம் வந்தார். கொண்டலாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே அவர்கள் பார்சலுடன் காத்திருந்தனர். அப்போது பூபதி அனுப்பியதாகச் சொல்லி அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல், சக்திவேலிடம் இருந்து பார்சலை வாங்கி பிரித்து பார்த்தனர். அந்த பார்சலில் செல்போன்கள் இல்லாமல், சாக்லெட்டுகளும், கற்களும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அந்த கும்பல் இருவரையும் கடத்திச்சென்று, அஸ்தம்பட்டியில் உள்ள ஒரு குடோனில் அடைத்து வைத்தனர். கடுமையாக தாக்கியுள்ளனர். ஏற்கனவே பூபதி, கேமரா வாங்கிக் தருவதாகக்கூறி 2 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டதோடு, இப்போது சாக்லெட் பார்சலை செல்போன் என்று கூறி ஏமாற்றப் பார்க்கிறீர்களா? உடனடியாக 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் இங்கிருந்து நீங்கள் ஊருக்குப் போக முடியும் என்றும் மிரட்டியுள்ளனர்.
சக்திவேல், பிரபாகரன் ஆகியோரிடம் இருந்த ஏடிஎம் கார்டை பறித்துக்கொண்ட அந்த கும்பல், ஏடிஎம் மெஷினில் செலுத்தி பார்த்தபோது, அவர்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கும்பல், அவர்களின் பெற்றோர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, 'உங்கள் மகனை கடத்தி வைத்திருக்கிறோம். உடனடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால்தான் விடுவிப்போம்,' என்றும் தெரிவித்துள்ளனர்.
பயந்துபோன பெற்றோர்கள் அவர்களின் வங்கிக் கணக்கில் 43 ஆயிரம் ரூபாய் செலுத்தினர். அதை எடுத்துக்கொண்ட கடத்தல் கும்பல், சக்திவேல் மற்றும் பிரபாகரனை விடுவித்தனர்.
இதுகுறித்து சக்திவேல் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த கரண் (28) என்பவர் தலைமையிலான ஏழு பேர் கும்பல்தான் தன்னையும், நண்பரையும் கடத்திச்சென்று, மிரட்டிப் பணம் பறித்தது என்பது தெரிய வந்தது.
கரணிடம் புதிய கேமரா வாங்கிக் கொடுப்பதாக பூபதி 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். கேமரா வாங்கித்தராததோடு, பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் செல்போனுக்காக கொடுத்த பணத்தை சக்திவேல் திரும்பித் தருமாறு கேட்டு பூபதிக்கு குடைச்சல் கொடுத்து வந்துள்ளார்.
சக்திவேலையும், கரணையும் மோதவிட்டு குளிர்காய திட்டம் போட்டார் பூபதி. இதையடுத்துதான் சக்திவேலிடம் விலையுயர்ந்த 9 செல்போன்கள் கொண்ட பார்சலை கொடுத்து அனுப்பி இருப்பதாகவும், தான் கொடுக்க வேண்டிய பணத்துக்கு ஈடாக அதை வைத்துக்கொள்ளுமாறும் கரணுக்கு தகவல் அளித்துள்ளார். அப்போதுதான் பார்சலில் வெறும் சாக்லெட்டுகளும், கற்களும் இருந்ததைக் கண்டு ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்த கரண், தன் கூட்டாளிகளுடன் சக்திவேலையும், அவருடைய நண்பரையும் கடத்தியுள்ளார். செல்போன் பார்சலுடன் வந்த இருவருமே பூபதியின் ஆள்கள்தான் என்றும் கரண் கருதியதும் அவர்களைக் கடத்த முக்கிய காரணமாக இருந்திருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கரண் மட்டுமின்றி அவருடைய கூட்டாளிகளான சேலம் கோட்டையைச் சேர்ந்த முகமது பாஷா (30), அக்தர் அலி (39), ஆசிப் (28), அப்துல் லத்தீப் (36), மேட்டுத்தெருவைச் சேர்ந்த இம்ரான் (36), நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த சரவணன் (38) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.
இந்த கும்பல் சக்திவேலையும், பிரபாகரனையும் கடத்திச்சென்று அடைத்து வைத்திருந்த குடோனுக்கு அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்ஐ சுப்ரமணி சீருடையில் சென்றுள்ளார். அவரும் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். கிடைத்த பணத்தில் எஸ்எஸ்ஐக்கு பத்தாயிரம் ரூபாயை அந்த கும்பல் கொடுத்திருப்பதும், அதனால் கடத்தல் பற்றிய விவரங்களை எஸ்எஸ்ஐ சுப்ரமணி காவல்துறையில் சொல்லாமல் மறைத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, கடத்தல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சிறப்பு எஸ்ஐ சுப்ரமணியையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சிறப்பு எஸ்ஐ உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும், நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், மோசடியில் ஈடுபட்ட பூபதியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.