நாகா்கோவில் மணிகட்டிபொட்டல் பகுதியை சோ்ந்த எழுத்தாளா் பொன்னீலன் தமிழ் முற்போக்கு இலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்க படைப்பாளி ஆவா். சிறுகதை தொகுப்பு, வரலாற்று நூல்கள், நாவல்கள், கட்டுரை போன்ற இவரின் இலக்கிய படைப்புகள் எழுத்துலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பல்வேறு ஊா்களில் ஆசிரியராக பணியாற்றி வந்த பொன்னீலன், கோவில்பட்டியில் பணியாற்றும் போது அங்குள்ள மக்களின் வாழ்க்கையையும், நிலங்களையும் மையமாக கொண்டு, அவா் எழுதிய கரிசல் எனும் நாவல் 1976 ஆம் ஆண்டு வெளியானது. இது இவருடைய முதல் நாவலாகும். இந்த நிலையில் 1992-ஆம் ஆண்டு வெளி வந்த பொன்னீலனின் புதிய தரிசனங்கள் என்ற நாவல் இந்திராகாந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலையை மையமாக வைத்து எழுதப்பட்டது. இந்த நாவலுக்கு 1994- ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.
இந்த நிலையில் எழுத்தாளா் பொன்னீலனுக்கு 80 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் எழுத்துலகில் 55 ஆண்டுகள் என்ற இரும்பெரும் விழா 16-ம் தேதி பெரும் விமா்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொன்னீலனை சந்தித்து வாழ்த்து கூறிய திரைப்பட இயக்குனா் பி.சி.அன்பழகன் பொன்னீலன் எழுதிய கரிசல் நாவல் திரைப்படமாக இயக்க போவதாக அறிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்து, அதற்கான அனுமதியையும் கொடுப்பதாக பொன்னீலன் கூறினார்.
ஏற்கனவே பொன்னீலன் எழுதிய உறவுகள் என்ற சிறுகதை திரைப்பட இயக்குனா் மகேந்திரனால் 'பூட்டாத பூட்டு' என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது என்பது குறிப்பிடதக்கது.