2018 நவம்பர் 16.. இந்த நாளை எந்தக்காலத்திலும் தமிழகம் மறக்காது. அதிகாலை அடித்த கஜாவை தாங்கி தென்னைகளும் பலாவும் எதிர்த்து நின்றது. கஜாவின் அடுத்தடுத்த சில மணி நேர தாக்குதலில் அடியோடு சாய்ந்தது கோடி கோடியாய் மா, பலா, வாழை, தேக்கு, தென்னை என்று அத்தனை மரங்களும் துணைக்கு மின்கம்பங்களும் சாய்ந்தது. உயிர் பிழைத்து வெளியே வந்து பார்த்த விவசாயிகளுக்கு நெஞ்சே வெடித்தது. அத்தனை மரங்களும் மரண நிலையில் சாய்ந்து கிடப்பதை பார்த்து.
டெல்டாவின் தெற்கில் குறிவைத்து தாக்கிய கஜா விவசாயகளின் வாழ்வாதாரம் தென்னை, பலா மரங்களை அழித்தது போல மீனவர்களின் படகுகளை ஒன்றோடு ஒன்றாய் மோதவிட்டு உடைத்து போட்டு மீனவர்களின் வாழ்க்கையை சீரழித்தது. மக்களையும் மரங்களையும் படகுகளையும் கூட மீட்க வராத அரசாங்கம் உள்ளூர் இளைஞர்கள் சீரமைத்த புதிய பாதையில் வந்தார்கள் அமைச்சர்களும், அதிகாரிகளும் சில நாட்களுக்கு பிறகு. இழப்புகளை ஈடு செயவோம், நிவாரணம் தருவோம், தென்னை மரங்களை வெட்டி அகற்றவும் புதிய நடவுக்கு கன்றும் தருவோம், விவசாயத்தை மீட்க துணை நிற்போம், மீனவர்களின் படகுகளை சீரமைப்போம், வீடுகளை சீரமைக்க நிவாரணம் என்று சொன்னார்கள்.. செய்தார்களா?
தென்னைக்கும், வீடுகளுக்கும் 60 சதவீதம் பேருக்கு நிவாரணம் கிடைத்தாலும் மா, பலா, வாழைக்கும் எதுவும் கிடைக்கவில்லை. அரசாங்கம் கொடுத்த தென்னங்கன்றுகளும் வீரியமில்லா கன்றுகளாக உள்ளது.
100 நாட்கள் ஆன பிறகும் புயலின் தாக்கத்தில் இருந்து ஒருவர் கூட மீளவில்லை. 100 வது நாளை தென்னை மரங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி கதறி அழுது தங்கள் சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்.
இன்னும் எத்தனை நாட்கள் தான் இப்படியே இருக்குமோ...