கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கேப்பர் மலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலராக சுதாகர் என்பவர் செயல்பட்டு வந்தார். இவர் மீது பல்வேறு லஞ்ச புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. எந்த ஒரு பணிக்காகவும் இவர் லஞ்சம் பெறுவதாகவும் இந்த லஞ்சப்பணம் புரோக்கர்கள் மூலம் சென்னையில் ஒரு புரோக்கரிடம் கொடுத்து அதன் பிறகு சென்னையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுதாகரின் இல்லத்திற்கு இந்த பணம் செல்வதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஒருவர் கடலூரை சேர்ந்தவரிடமிருந்து கழிவு நீர் டேங்கர் லாரி வாங்கியுள்ளார். இந்த வாகனத்தை புதுப்பிப்பதற்காக கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை செல்வராஜ் என்பவர் மூலம் அணுகியுள்ளார். செல்வராஜ் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து வட்டார போக்குவரத்து அலுவலரை சந்தித்தபோது அவர் அங்கு வந்த சிவா என்ற புரோக்கரை சந்திக்க கூறியுள்ளார். சிவா என்ற புரோக்கரை சந்தித்தபோது அவர் 5000 ரூபாய் ஆர்.ட்டி.ஓவிற்கு, தனக்கு 500 ரூபாய் என மொத்தம் 5,500 ரூபாய் தர வேண்டுமென கேட்டுள்ளார்.
இதனை கொடுக்க மனம் இல்லாத செல்வராஜ் தனது வாகனத்திற்கு அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ள நிலையில் தான் இதற்கான பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என கருதி கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதனிடம் புகார் தெரிவித்தார். தேவநாதனின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய 5,500 ரூபாய் பணத்தினை புரோக்கர் சிவாவிடம் இன்று கொடுப்பதற்காக செல்வராஜ் சென்றார். அப்பொழுது லஞ்ச ஒழிப்பு போலீசாரும் உடன் சென்ற நிலையில் செல்வராஜ் புரோக்கர் சிவாவிடம் அந்த பணம் கொடுத்து, அவர் ஆர்.டி.ஓவிடம் கொடுக்கும் பொழுது பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக இருவரையும் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ அறையில் சோதனை மேற்கொண்ட போது 2.5 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சென்னையில் பணம் கைமாற்றம் செய்யும் புரோக்கரையும் அங்குள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் பிடித்த நிலையில் சென்னையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சுதாகரின் வீடு மற்றும் கடலூரில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.