கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி அரசு தொடக்கப்பள்ளிக்கு தேவையான பொருட்களை ரூ. 2 லட்சம் செலவில் கல்விச் சீராக பொதுமக்கள் வழங்கினார்கள். கடந்த ஆண்டு இந்த பள்ளிக்கு வேன் வசதி செய்து கொடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதால் கடந்த ஆண்டு அப்பகுதி பொதுமக்கள் பெற்றோர்கள், அனைத்து மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக வேன் வழங்கினார்கள். அதே போல மாணவர்களையும் பெற்றோர்களையும் ஊக்கப்படுத்தும்விதமாக இலவச சைக்கிள் திட்டத்தின் கீழ் 19 சைக்கிள்கள், கணினி, வழங்கியதுடன் ஆங்கில பயிற்சிக்காகவும், கணினி பயிற்சிக்காகவும் 3 ஆசிரியர்கள் போன்ற வசதிகளை பெற்றோர் ஆசிரியர் கழகம், மற்றும் கிராம பொதுமக்கள், முன்னால் மாணவர்கள் செய்திருந்தனர். மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அனைவருக்கும் அடையாள அட்டை, போன்ற வசதிகளையும் செய்து கொடுத்ததுடன் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்தும் வந்தனர். அதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. மேலும் தனியார் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்களையும் அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.
இந்த ஆண்டு 32 புதிய மாணவர்கள் சேர்க்கையுடன் 101 மாணவ, மாணவிகள் பயிலும் இந்த அரசுப் பள்ளியில் அதிகமான மாணவ, மாணவிகள் இலவச வேனில் வந்து செல்கின்றனர். மேலும் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பள்ளி மாணவர்களின், கல்விக்கு தேவையான பொருட்கள் பற்றி ஆய்வு செய்த குழுவினர் மாணவர்களுக்கான இருக்கைகள், பீரோ, மின்விசிறிகள், மேசை, நாற்காலிகள், கரும்பலகைகள், வண்ண பலகை, பெயர் பலகை, பாய்கள், பேப்பர்கள், குடங்கள், எழுது பொருட்கள், சுகாதார பொருட்கள், முதலுதவி மருந்துகள், எழுத்துப் பயிற்சி கையேடுகள் என்று பல்வேறு பொருட்களை ரூ. 2 லட்சம் செலவில் கிராம மக்களும் குழுவினரும் இணைந்து வாங்கி திருவள்ளுவர் மன்றத்தில் இருந்து ஊர்வலமாக கல்வி சீர்களை பள்ளிக்கு கொண்டு வந்தனர். சீர்களுடன் வந்த பொதுமக்களை பள்ளி ஆசிரியைகள் சந்தனம், குங்குமம் கொடுத்து வரவேற்றனர்.
கல்விச் சீராக கொண்டு வரப்பட்ட பொருட்களை ஒப்படைக்கும் விழா பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் சந்திரா தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிமாறன், வட்டார வளமை கண்காணிப்பாளர் செல்வராஜ், ஓய்வு உதவி தொடக்கக் கல்வி அதிகாரி ரெத்தினம் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. விழாவில் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெற்றோர்களும், பொதுமக்களும் கொண்டு வந்த கல்விச் சீர் பொருட்களை பள்ளிக்காக பெற்றுக் கொண்டார்.
மேலும் பெற்றோர்கள், மேலாண்மைகுழு, மற்றும் கண்காணிப்பு மற்றும் ஆசிரியர்களின் செயல்திட்டங்கள் வெளியிடப்பட்டது. அதில், பெற்றோர்கள் தரப்பில், வரும் ஆண்டிலும் மாணவர்களுக்கு சைக்கிள், ஒவ்வொரு மாணவருக்கும் பிறந்த நாள் பரிசுகள், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும் பெற்றோருர்களுக்கு பரிசுகள், மாலை 6 மணி முதல் 7 மணி வரை ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சிகளை நிறுத்திவிட்டு மாணவர்களை படிக்க சொல்லுதல், அதை கண்காணிக்க குழு அமைத்தல், வேனில் செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்புக்காக சுழற்சி முறையில் பெற்றோர்களே பாதுகாவலராக செல்லுதல், மாதம் ஒரு முறை கொத்தமங்கலம் கிளை நூலகத்திற்கு மாணவர்களை வேனில் அழைத்துச் சென்று நூல்கள் படிக்க கற்றுக் கொடுத்தல், கணினி இயக்க, சதுரங்க போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ள பயிற்சி அளித்தல் ஆகிய செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்கள்.
அதே போல ஆசிரியர்கள் தரப்பிலான செயல்திட்டங்களாக முதல் வகுப்பில் மாணவர்களை தமிழ் எழுத்துக் கூட்டி படிக்க வைத்தல், 2ம் வகுப்பில் தமிழ் சரளமாக படித்தல் ஆங்கிலம் சிறு வாக்கியம் அமைத்தல், விழா அழைப்பிதழ்கள் வாசித்தல், 3 வகுப்பில் ஆங்கிலத்தில் எழுத வைத்தல், 4ம் வகுப்பில் தமிழ் செய்தி தாள்கள் வாசிக்க பயிற்சி, 5ம் வகுப்பில் தமிழ், ஆங்கிலத்தில் பேச எழுத பயிற்சி, தமிழ் ஆங்கில செய்திதாள்கள் வாசிக்க பயிற்சி, கணினி பயிற்சி, கடிதம் எழுத பயிற்சி அளிப்பதாக ஆசிரியர்கள் செயல்திட்டத்தை வாசித்தனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன் பேசும் போது,
இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை அதனால் தற்போது கட்டிடம் கட்ட வேறு வழியில் ஏற்பாடு செய்கிறேன். அரசுப் பள்ளிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து கிராம மக்கள் இவ்வளவு பொருட்செலவில் தளவாடப் பொருட்கள் வழங்கி இருப்பது பெருமையாக உள்ளது. எதிர் வரும் காலத்தில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பள்ளியாக இந்த பள்ளி வளர வேண்டும். அதற்காக என்னால் இயன்ற உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன் என்றார். விழாவில் முன்னால் மாணவர்கள் கிராம பொதுமக்கள், மேலாண்மைக்குழுவினர், பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கடந்த மாதங்களில் பிறந்த நாள் கொண்டாடிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர் அருண் தொகுத்து வழங்கினார்.