![Case filed by TN Govt; Supreme Court judges barrage of questions for the governor side](http://image.nakkheeran.in/cdn/farfuture/EE5Sx8A0lozebmwZjOCfFUgsDpi2FbJBCXYEfaKR9lA/1738913541/sites/default/files/inline-images/rn-ravi-art-3_0.jpg)
தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இத்தகைய சூழலில் தான், துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழு தொடர்பான விவகாரத்தைச் சேர்த்து விசாரிக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவில் யு.ஜி.சி. பிரதிநிதியைச் சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவுறுத்தினார். ஆனால், யு.ஜி.சி. பிரதிநிதியை விடுத்து 3 உறுப்பினர்களைக் கொண்ட தேடுதல் குழுவை அமைத்து தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், யு.ஜி.சி பிரதிநிதியைச் சேர்த்துத் தேடுதல் குழுவைச் சேர்க்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று (07.02.2025) மீண்டும் தொடங்கியது. அப்போது நீதிபதிகள், “ஆளுநர் எதுவும் விளக்கமளிக்காமல் மசோதாவை திரும்ப அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படி தெரியும்?. சம்மந்தப்பட்ட மசோதாவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை அளுநர் தெரிவிக்கவில்லை என்றால், மசோதாவில் என்ன திருத்தம் மேற்கொள்ள் வேண்டும் என்று அரசுக்கு எப்படி தெரியும்?. சம்மந்தப்பட்ட மசோதா மீது தான் ஒப்புதல் கொடுக்க முடியாது என்பதை எப்படி ஆளுநர் உணர்ந்தார்?. இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளியுங்கள்” என ஆளுநர் தரப்புக்கு அறிவுறுத்தினர்.
இதனையடுத்து ஆளுநர் தரப்பில் வாதிடுகையில், “துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசு கொண்டு வந்த நடைமுறை மத்திய அரசின் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அவற்றுக்கு ஆளுநர் எவ்வாறு ஒப்புதல் அளிப்பார்?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு நீதிபதிகள், “பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதா மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?. மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்?. ஆளுநர் அரசுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். மசோதா விவகாரத்தில் அரசுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது” எனத் தெரிவித்தனர்.
![Case filed by TN Govt; Supreme Court judges barrage of questions for the governor side](http://image.nakkheeran.in/cdn/farfuture/CpZ_QmNFNDKRhqmsYPu3sEyrhQEygV09QytTBK7K6TI/1738913569/sites/default/files/inline-images/sc-art-new-1.jpg)
இதனையடுத்து ஆளுநர் தரப்பு வாதிடுகையில், “பல்கலைக்கழக செயல்பாடு குறித்து ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சில துணைவேந்தர்களை அரசு அணுகியது. யு.ஜி.சி. விதிகளின் கீழ் கட்டுப்பட்டு உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பொறுப்பை ஆக்கிரமிக்க மாநில அரசு முயற்சித்தது. அரசியல் காரணங்களுக்காகவே துணைவேந்தர் மசோதாவை மாநில அரசு கொண்டு வந்தது. ஆளுநர் சில முரணான காரணங்களுக்காக ஒப்புதல் வழங்காமல் இருப்பார் என்றால், அரசு மற்றும் ஆளுநர் என இரு தரப்பும் இணைந்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். குறிப்பாக, இதன் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்புங்கள் என்று மாநில அரசே ஆளுநரை கேட்க வைக்கலாம். எனவே இதில் எதுவும் மாநில உரிமையை பறிப்பதாக கருத முடியாது. ஆளுநர் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200இல் விதி 1இன் கீழ் முடிவெடுத்தே ஆகவேண்டும் என்று கூறுவது, பிரிவு 200ஐ முரணாக திரித்து கூறுவதாக ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், “கடந்த 2023ஆம் ஆண்டு மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட பின்னர், தற்போது வரை என்ன நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்?. கடந்த 2 ஆண்டுகளாக மசோதாக்கள் அவரிடம் உள்ளதா?. மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா?” எனக் கேள்வி எழுப்பினர் அதற்கு ஆளுநர் தரப்பு, “இல்லை. மசோதாக்கள் அனுப்பப்பட்ட 2 மாதங்களில் தனது முடிவை தெரிவித்து விட்டார். அதில் 7 மசோதாக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார். நீதிபதிகள், “குடியரசுத் தலைவரும் ஒப்புதலை நிறுத்தி வைக்கிறாரா?”. குடியரசு தலைவர் மசோதா மீது முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்து என்ன? முடிவெடுக்காத நிலையில் அது அப்படியே கிடப்பில் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினர்.
![Case filed by TN Govt; Supreme Court judges barrage of questions for the governor side](http://image.nakkheeran.in/cdn/farfuture/74W_90Kfc7aMcO_nxv_XeTJeyUycsm7rLfG_wE47VGk/1738913604/sites/default/files/inline-images/judgement-art_54.jpg)
அதற்கு ஆளுநர் தரப்பில் வாதிடுகையில், “ஒப்புதல் அளிக்கப்படாமல் மசோதா குடியரசுத் தலைவரிடம் உள்ளதென்றால், அவர் அதற்கு மேல் எவரிடமும் கேட்க வேண்டியது இல்லை”எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “அப்படியெனில் அந்த மசோதா கிடப்பிலேயே இருக்குமா?” எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு ஆளுநர் தரப்பில் பதிலளிக்கையில், “ஒரு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது எதற்காக என்ற காரணத்தை ஆளுநர் எழுத தேவையில்லை. ஏனெனில், ஒரு மசோதாவை அளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார் என்றாலே, அது ஆளுநரின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இல்லை என்றுதான் பொருள்” என வாதிடப்பட்டது.