Skip to main content

பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருளுதவி! - விஜயகாந்த் அறிவிப்பு

Published on 20/08/2018 | Edited on 20/08/2018
 


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் நிவாரண உதவிகளாக வழங்குவதாக தேமுதிக நிறுவனத்தலைவர், கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கேரள மக்கள் இயற்கையின் சீற்றத்தினால் வரலாறு காணாத கன மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டு அனைத்து பொருட்களையும் இழந்து நிற்பதை பார்க்கும்பொழுது என் மனம் வேதனையாக உள்ளது. கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயன் நிவாரண நிதியாக 8 ஆயிரம் கோடி ரூபாய் தேவை எனவும், உடனடி தேவையாக இரண்டாயிரம் கோடி ரூபாய் வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.

முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் கேரள மாநிலத்திற்கு நிவாரண நிதியாக அறிவித்த மத்திய அரசு, பின்பு ஹெலிக்காப்டர் மூலம் நேரடியாக சென்று பார்வையிட்ட இந்திய பிரதமர் நரேந்திரமோடி வெள்ளத்தால் பாதித்த அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்த பின், கேரள மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்வதுடன், மத்திய அரசின் நிதியாக இரண்டாம் கட்டமாக 500 கோடி ரூபாய் அறிவித்திருக்கிறது. கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியை உடனடியாக ஒதுக்கிட வேண்டுமென தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அனைத்து மாவட்ட கழகத்தின் சார்பில் கேரள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் (ரூபாய் 1 கோடி மதிப்புள்ள பொருட்கள்) கேரள மாநிலத்திற்கு வரும் 24.08.2018 தேதியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்