சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலை பராமரிப்பு பணிக்காக வைக்கப்பட்ட அறிவுறுத்தல் பேனர் இந்தி மொழியில் இருந்ததற்கு அந்தப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் செல்லியம்பாளையம் முதல் பொத்தம்பாடி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பழுதடைந்துள்ள நிலையில் அதனை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சாலை சீரமைக்கப்படுவதால் அதற்கான எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சாலை பராமரிப்பின் போது வைக்கப்படும் அறிவுறுத்தல் பேனர்கள் தாய் மொழியில் வைக்கப்படும். ஆங்கிலம் இரண்டாம் அறிவுறுத்தல் மொழியாக இடம்பெறும். ஆனால் செல்லியம்பாளையம்-பொத்தம்பாடி இடையேயான பராமரிப்பு பணிக்காகச் சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இது அந்தப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் படிப்பறிவின்றி இருக்கும் சூழலில் தாய் மொழியான தமிழ் இடம்பெறாத இந்த எச்சரிக்கை பலகையால் எந்த பயனும் இல்லை. அதேபோல் தமிழகத்தில் இந்தி மொழி தொடர்பான சர்ச்சைகள் இருக்கும் நிலையில் இந்த பேனர் அந்த பகுதி மக்களிடையே கண்டனத்தைப் பெற்றுள்ளது.