வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் இணையும், மாநில ஊரக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான (14 கிலோ மீட்டர்) ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலை, கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் இருக்கிறது. இதனால், எங்கள் ஊர்ப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வெளியூரில் உள்ளவர்கள் பெண் கொடுக்க மறுப்பதாக அப்பகுதி மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் சிலர் கூறுகையில், "செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகா, காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணைப் புதுச்சேரி, கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட, ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலையை சீரமைக்கக்கோரி, (காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்தபோது) தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, வனத்துறை அமைச்சர், நெடுஞ்சாலை துறை, வனத்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் நேரில் சென்று மனுகொடுத்துப் பார்த்தோம், சரியான பதிலில்லை. அதனால், பதிவுத்தபால் அனுப்புதல், கையெழுத்துப் பிரச்சாரம் நடத்துதல், கண்டன ஆர்ப்பாட்டம் செய்தல், உண்ணாவிரதம் இருத்தல், ஜனாதிபதிக்கு இ-போஸ்ட் அனுப்புதல், சாலை மறியல் செய்தல், மண் சோறு சாப்பிடுதல் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை எந்த விதப் பயனும் இல்லை.
மேற்படி சாலை அமைக்க பலமுறை பல கோடி மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், தேர்தல் புறக்கணிப்பு செய்யும் நேரங்களில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப்படுத்துகின்றனர். ஆனால், தேர்தல் முடிந்தவுடன் வழக்கம்போல் மக்களை ஏமாற்றி விடுகின்றனர்" எனக் கவலை தெரிவிகின்றனர்.
இதுகுறித்து, நெடுஞ்சாலை துறையினரிடம் கேட்டதற்கு, "மேற்படி சாலையில் காட்டூரில் இருந்து அருங்கால் வரையிலும், இதேபோல் நல்லம்பாக்கம் கிராமத்திலிருந்து வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இணையும் கூட்டுரோடு பகுதி வரையிலும் வனத்துறைக்குச் சொந்தமான இடம் உள்ளதால் சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை" என்று கூறுகின்றனர்.
எனவே இதுகுறித்து, வனத்துறையினரிடம் கேட்டதற்கு, "நெடுஞ்சாலைத்துறையினர் இதுவரை எங்களிடம் அனுமதி கேட்கவில்லை என்றும், மேற்படி சாலையில் வனத்துறைக்குச் சொந்தமான இடம் உள்ளதால் அதற்கு ஈடாக இரண்டு மடங்கு இடத்தினை வருவாய்த்துறையினர் நிலம் ஒதுக்கி கொடுத்தால்தான் அனுமதி வழங்கப்படும்" என்றனர். ஆகையால் இதுகுறித்து, வருவாய்த் துறையினரிடம் கேட்டதற்கு, "நிலம் ஒதுக்கி தரும்படி எங்களிடம் யாரும் இதுவரை கேட்கவில்லை" என்றனர்.
"இதுபோல், ஒருவர் மீது ஒருவர் பழி போட்டு வருகின்றனர். இதில் எத்தனை ஆட்சிகள் மாறினாலும் எங்களின் காட்சிகள் இன்னும் மாறவில்லை. சாலை சீர்கேட்டினால் மேற்படி சாலையில் இயங்கி வந்த தமிழக அரசு பேருந்து மற்றும் மாநகரப் பேருந்துகள் என 5 க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டு அடியோடு துண்டிக்கபட்டுவிட்டன. மேலும், எங்கள் ஊர்ப் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வெளியூரில் உள்ளவர்கள் பெண் கொடுக்கவும் மறுக்கின்றனர். அவசர ஆபத்துக்கு 108 ஆம்புலன்ஸ் வந்து செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், பள்ளி மாணவர்கள், அன்றாடம் வேலைக்குச் சென்று வருவோர் என அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்" என்கின்றனர் பொதுமக்களில் சிலர்.
ஊரப்பாக்கம் - நல்லம்பாக்கம் சாலையை இருவழிச் சாலையாக மாற்றி போர்க்கால அடிப்படையில் சீரமைக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? என்று பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனர்.