திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் நகரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் செய்யார் நகரத்துக்கு அடுத்தபடியாக புளியரம்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த வழியாகத்தான் காஞ்சிபுரம் செல்ல வேண்டும். இந்த சாலையில் செல்லும்போது வழியில் புளியரம்பாக்கம் ஏரி உள்ளதால் மழைக்காலங்களில் இந்த சாலை குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அதனால் ஏரிக்கரையை ஓட்டி செல்லும் செய்யார் – காஞ்சிபுரம் சாலையில் ஏரிக்கரை மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் வரும் 1.9 கி.மீ தூரத்துக்கு மட்டும் சிமெண்ட் சாலையாக அமைத்துவிடலாம் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டது.
ஒப்பந்தத்தை நாமக்கல்லை சேர்ந்த ஒரு நிறுவனம் எடுத்துள்ளது. இந்த நிறுவனம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிக வேண்டப்பட்ட நிறுவனம் எனக்கூறப்படுகிறது. கடந்த 8 மாதங்களாக பணிகளை செய்யாமல் அந்த ரோட்டை கொத்தி போட்டுவிட்டு மட்டும் சென்றுள்ளனர்.
இதனால் பிஸியான இந்த சாலையில் பயணிக்க முடியாமல் 6 கி.மீ சுத்திக்கொண்டு செல்கின்றனர். இதுப்பற்றி ஆரணி பாராளமன்ற தொகுதி எம்.பியும், காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவருமான விஷ்ணுபிரசாத்திடம் பொதுமக்கள் முறையிட்டதை தொடர்ந்து, நவம்பர் 13ந்தேதி செய்யார் அண்ணா சிலையருகே சாலை மறியல் செய்தார்.
இதனால் அதிர்ச்சியான காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து இரண்டு மாதத்துக்குள் சாலை அமைத்து தந்துவிடுகிறோம் என உறுதியளித்தபின், சாலைமறியலை முடித்துக்கொண்டு கிளம்பினார்.
எம்.பியே சாலைமறியல் செய்தது பொதுமக்களை ஆச்சர்யமாக பார்க்க வைத்தது. இதுப்பற்றி எம்.பி விஷ்ணுபிரசாத்திடம் நாம் கேட்டபோது, "கடந்த 5 மாதமாக சாலையை கொத்திப்போட்டுவிட்டு போயுள்ளார்கள். 8 மாதமாக இந்த பணி நடைபெறாமல் நிற்கிறது. அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் சாலைமறியல் செய்தேன்" என்றார்.