திருச்சியில் மண்ணச்சநல்லூரில் இருந்து துறையூர் செல்லும் வழியில் திருச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் பொழுதுபோக்கை கழிப்பதற்காக அமைந்துள்ள சோலை என்ற ரிசார்ட்டுக்கு வருவது வழக்கம். அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன், தனித்தனி காட்டேஜ்களுடன் ஒரு தனித் தீவு போல அமைக்கப்பட்டிருந்த இந்த ரிசார்ட்டில், இளைஞர்களும், இளம் பெண்களும் தங்களுடைய நண்பர்களுடன் வந்து குடி, கும்மாளம் என்று தங்களுடைய பொழுதை கழிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை 10 மணியில் இருந்து இன்று காலை 5.30 மணி வரை ரெய்டு நடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரித்த போது, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் மதுரையில் இருந்து நெப்போலியன் என்ற இளைஞர் தன்னுடைய பெண் நண்பருடன் இங்கு வந்து தங்கியுள்ளார். அதில் இருவரும் குடித்துவிட்டு, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவர்கள் தங்கியிருந்த காட்டேஜில் உள்ள டிவியை உடைத்துள்ளனர்.
இந்த விவகாரம் ரிசார்ட் நிர்வாகத்திற்கு தெரியவந்ததை அடுத்து, அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவரை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், தன்னுடைய அம்மா செல்வா மதுரை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு கூடுதல் உதவி இயக்குநராக உள்ளார் என்றும், எங்க அம்மாவிற்கு தெரிந்தால் என்ன ஆகும் என்றும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதற்கு என்று காவல்துறையும் ரிசார்ட் நிர்வாகத்திடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உடைக்கப்பட்ட டிவிக்காக 10 ஆயிரம் பணத்தை மட்டும் வாங்கிக் கொண்டு வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் பிரச்சனையை முடித்து விட்டார்கள்.
ஆனால் அந்த பிரச்சனைக்கு பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதால், நேற்று காலை மதுரை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு கூடுதல் உதவி இயக்குநரான செல்வா தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இன்று காலை வரை அந்த ரிசார்ட்டில் சோதனை நடத்தி, உரிய ஜிஎஸ்டி கட்டவில்லை என்று கூறி ரிசார்ட்டில் உள்ள அனைத்து கேட்டுகளை இழுத்து பூட்டிவிட்டு ஊழியர்களின் செல்போன்களை பிடுங்கி வைத்துக் கொண்டு எல்லோரையும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி சென்றுள்ளார் என்று ரிசார்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரச்சனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.