மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி, டெல்டா மாவட்ட குறுவை, சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். போதிய பருவமழை இல்லாததால் கடந்த 8 ஆண்டுகளாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் நீர் திறக்கப்படாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அணையில் 100 அடி தண்ணீர் இருந்ததால் 25 நாட்களுக்கு முன்னதாகவே டெல்டா பாசனத்திற்கு குறித்த காலமான ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
டெல்டாவிற்கு நீர் திறக்கப்படுவதால் அதற்கான பணிகளை டெல்டா விவசாயிகள் மேற்கொண்டனர். அதன்படி ஜூன் 12ம் தேதி தமிழக முதல்வர் முன்னிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்கட்டமாக 3000 கனஅடியாக திறக்கப்பட்ட தண்ணீர் அன்று மாலையே 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95 அடியை எட்டியது. மேலும் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியை சென்றடையவில்லை என்று விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டதால், கூடுதல் தண்ணீர் வேண்டும் என்பதற்காக ஜூலை 1ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக நீர்திறப்பு 15 ஆயிரம் கன அடியிலிருந்து 13 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் கடைமடை பகுதி வரை சென்றடைந்ததை அடுத்து தற்பொழுது நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.