ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை தாலுக்காவுக்கு உட்பட்ட அல்லிக்குளம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி கௌசல்யா. இவருக்கு சொந்தமான நிலத்தின் வழியாக அம்மூர் பேரூராட்சி 150 மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைக்கும் பணியினை மேற்க்கொண்டுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த கௌசல்யா மற்றும் அவரது உறவினர்கள் தங்களது அனுமதியில்லாமல், தங்கள் நிலத்தின் மீது எப்படி தார்சாலை அமைக்கலாம் என ஒப்பந்ததாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதனை மீறி சாலை அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. தங்களுக்கு சொந்தமான நிலத்தின் வழியாக தார் சாலை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சாலை அமைக்கும் இயந்திரத்தின் முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அவர்களிடம், இந்த இடம் கௌசல்யாவுக்கு சொந்தமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது என அதன் நகலை காட்டியுள்ளனர். இதனால் காவல்துறை என்ன செய்யலாம் என ஆலோசித்தனர்.
இதற்கிடையில் சம்பவயிடத்துக்கு வந்த இராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் கீதா போராட்டத்தில் ஈடுபட்ட கௌசல்யா மற்றும் அவரது உறவினர்கள் 5 பேரை வலுக்கட்டாயமாக இழுத்துசென்று, குண்டுக்கட்டாக வேனில் ஏற்றி ராணிப்பேட்டை காவல் நிலையத்து கொண்டு சென்றுள்ளார். அதேநேரத்தில் அந்த சாலையை போடவும் வைத்தார் டி.எஸ்.பி கீதா. உயர்நீதிமன்ற உத்தரவை காட்டியபிறகு அதிகாரிகள் இப்படி நடந்துக்கொண்டது அக்குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.